• Wed. Apr 24th, 2024

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல்!…

By

Aug 9, 2021

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற விசாரணை குறித்து தமிழ்நாடு பொதுத்துறை சார்பிலும் பதில் மனு தாக்கியது. கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

அந்த ஆணையம் ஒரு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டது. இந்த புலனாய்வு அமைப்பு விசாரணை செய்த அறிக்கையை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை முடித்து வைப்பதாக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தது. இதனையடுத்து, இதனை எதிர்த்து சமூக செயற்பாட்டாளரான ஹென்றி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

தமிழக காவல்துறை விசாரணை செய்து வருகின்ற நிலையில், இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் அவசர கதியில் முடித்து வைத்திருப்பதாகவும், அந்த புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கையை ஏற்றுக் கொள்ளக்கூடாது, தடை செய்ய வேண்டும் திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஒரு சீலிடப்பட்ட கவரில், நீதிமன்றம் மட்டும் பார்க்கும் வண்ணம் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தமிழக அரசு தரப்பில் பொதுத்துறை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது முதல் யார்யாரிடமெல்லாம் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை மேற்கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் முதல் காவல்துறையினர் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்கபட்டுள்ளது என்றும், 20-க்கும் மேற்பட்டோருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், கடந்த மே 14-ம் தேதி இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டது.

அதன்படி, போராட்டக்காரர்களுக்கு எதிரான 38 வழக்குகள் திரும்ப பெற்றுள்ளதாகவும், 84 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்யாததால், மேலும் அவகாசம் வழங்கி செப்-13ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *