• Thu. Mar 28th, 2024

கொரோனா அசாதாரண சூழலால் சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து!…

By

Aug 12, 2021

சென்னை தலைமைச் செயலக கோட்டைக் கொத்தளத்தில் சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியச் சுதந்திர தின திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தலைமைச் செயலகக் கோட்டைக் கொத்தளத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் காலை 09.00 மணிக்குத் தேசியக் கொடியினை ஏற்றிச் சிறப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.

கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரணச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வயது மூப்பினைக் கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி / ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில், இந்தாண்டு, பொதுமக்கள், மாணவர்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்தக் குடிமக்கள் விழாவினைக் காண நேரில் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுதந்திர தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *