• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இரண்டாவது முயற்சியில் காட்டுக்குள் விடப்பட்ட ரிவால்டோ!..

By

Aug 13, 2021

யானை வனப்பகுதியிலேயே இருப்பதாக தமிழக வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானையை, வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து சிகிச்சை அளித்த வனத்துறையினர், அதனை சமீபத்தில் காட்டில் விட்டனர். ஆனால் அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு திரும்பி வந்து விட்டது.

அந்த யானையை மீண்டும் காட்டில் விட எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல உத்தரவிடக் கோரியும் இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ரிவால்டோ யானையை காட்டுக்கு அனுப்பும் முதல் முயற்சி தோல்வியடைந்த போதும், இரண்டாவது முயற்சியாக அதை காட்டுக்குள் விடப்பட்டுள்ளதாகவும், இதுவரை யானை காட்டிலேயே இருப்பதாகவும், ஆரோக்கியமாக இருப்பதாகவும், அதன் நடமாட்டத்தை 30 வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ரிவால்டோ யானையால் தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடிகிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்  எனக் கூறி, வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.