தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இன்று காலை அமைச்சர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தண்ணீரை திறந்து வைத்தனர்.
தமிழக அரசின் உத்தரவின்படி இன்று காலை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி , ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பைணன், பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரும், தேனி ,திண்டுக்கல் மதுரை ,சிவகங்கை மாவட்ட கலெக்டர் களும் கலந்துகொண்டு, மதுரை திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களுக்கு தண்ணீரை திறந்து வைத்தனர் .
மேல் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடும் போது ,ஷட்டர் பகுதிகளில் இருந்த தேன்கூடு கலைந்து தேனீக்கள் வேகமாகப் பரவி, அனைவரையும் கொட்டத் தொடங்கியது -இதில் அமைச்சர்கள் ,அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட எஸ்பி மற்றும் பொதுப்பணித்துறையினர் 8 பேர்களுக்கு காயம் ஏற்பட்டு ,தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிகிச்சை மேற்கொண்டு ,ஊசி போட்டுக் கொண்டனர்.தேனீக்கள் கூட்டம் கொட்ட தொடங்கியதை அடுத்து, அங்கு கூடியிருந்த அரசு அலுவலர்கள், திமுக கட்சியினர் ,பொதுமக்கள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் சிதறி ஓடினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டு அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றனர்.