• Fri. Apr 18th, 2025

வேதனையில் டெல்டா மாவட்ட விவசாயிகள்.. விடியல் தருமா அரசு?…

By

Aug 9, 2021

குறுவை சாகுபடிக்கு போதிய உரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி. உடனடியாக உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு 3.10 லட்சம் ஏக்கரில் நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 3.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நெற் பயிர்கள் அனைத்தும் வளரும் பருவத்தில் உள்ள நிலையில் இருப்பதால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் கடைகள் மூலமாகவும் யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு இரண்டு மூட்டை யூரியா, ஒரு மூட்டை பொட்டாஷ் ஆகியவை 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 57 ஆயிரம் ஏக்கருக்கு விவசாயிகள் பதிவு செய்த நிலையில் 46 ஆயிரம் ஏக்கருக்கு மட்டுமே மானிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் திருவாரூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் முழுமையாக மானியங்கள் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் உரங்கள் விநியோகம் செய்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் குறுவை தொகுப்பு திட்டத்தில் பதிவு செய்யாமல் உள்ள விவசாயிகள் நடவு செய்துள்ள நெல் பயிர்களுக்கு தேவையான உரங்களை தனியார் கடைகளில் மட்டுமே பெற முடியும். ஆனால் அங்கும் உரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தேவையான உரங்கள் குறுவை தொகுப்பு திட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதால், விவசாயிகளுக்கு போதிய உரம் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பயிர்களுக்கு உரிய நேரத்தில் உரமிட்டால் மட்டுமே மகசூல் கிடைக்கும், தற்போது நிலவும் தட்டுப்பாட்டை தமிழக அரசு உடனடியாக போக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து தஞ்சை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனரிடம் கேட்டபோது, தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 1.35 லட்சம் ஏக்கரில் குறுவை நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரப்பளவில் நடவு செய்யப்பட்ட பயிர்களுக்கு 12 ஆயிரம் டன் யூரியா தேவைப்படுகிறது. ஆனால் மாவட்டத்திற்கு இதுவரை 700 டன் யூரியா உட்பட இதுவரை 2,600 டன் உரங்கள் மட்டுமே விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதால் அங்கிருந்து வந்தவுடன் உடனுக்குடன் அவை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நிலத்தில் நெல் சாகுபடி நடைபெறுவதால் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதற்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.