• Wed. Dec 11th, 2024

விஜிலன்ஸ் வளையத்தில் எஸ்.பி.வேலுமணி..? பதட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்…!

By

Aug 10, 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்திருப்பது, அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையை தி.மு.க. ஏவி விடுமோ என்கிற அச்சத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் படபடப்புடனும், பதட்டத்துடனும் பயத்தை வெளியே காட்டாமல் இருந்து வருவதுதான் தற்போதைய அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக்கே!


சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க.வின் ஆர்.எஸ் பாரதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 2018ம் ஆண்டில் அனுப்பிய புகாரின் அடிப்படையில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 52 இடங்களில் இன்று லஞ்சஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். வீடு மற்றும் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்த நிலையில் மாநகராட்சிகளில் நடைபெற்ற டெண்டர்களில் கிட்டத்தட்ட 800 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.


சென்னை மாநகராட்சியில் 464 கோடி டெண்டரில் நடைபெற்ற முறைகேடு கோவை மாநகராட்சியில் 346 கோடி டெண்டரில் நடைபெற்ற முறைகேடுகள் என கிட்டத்தட்ட 800 கோடி டெண்டர் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த ஊழல் வழக்குகளில் மாநகராட்சி அதிகாரிகளை சாட்சிகளாக சேர்க்கவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே 3 பிரிவுகளில் 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


இந்நிலையில் கோவை, மற்றும் சென்னை, வேளச்சேரி, தேனாம்பேட்டை, சீத்தாம்மாள் காலனி உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மதுக்கரையில் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகராஜா வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. சி.ஆர். கன்ஸ்ட்ரக்சன் ராஜன், எஸ்.பி. பில்டர்ஸ் முருகேசன், சேசு ராபர்ட் ராஜா, கே.சி.பி. என்ஜினியரிங். சந்திரபிரகாஷ், சந்திரசேகரன், செந்தில் அண்ட் கோ பங்குதாரர் அன்பரசன் உள்ளிட்ட பலரது வீடு மற்றும் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வந்தன.


எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் வீட்டில் ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில் அவரது நெருக்கமான நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. வடபழனியில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. வரவு செலவு புத்தகங்கள் கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள்.


வேலுமணி அதிமுக அமைச்சரவையின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய சகோதரரான அன்பரசன் மற்றும் அவர்கள் இயக்கும் நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. வேலுமணி தனக்கும் தனக்குச் சார்ந்தவர்களுக்கும் ஆதாயம் தேடும் வகையில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்| என அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் குறிப்பிட்டுள்ளார்.


ரெய்டு விவகாரத்தை தொடர்ந்து குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் காலை முதலே குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து வீட்டின் முன்பு தடுப்புகளை வைத்து போலீசார் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக தொண்டர்கள் பேரிகார்டு பலகையை தூக்கி வீசி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.


எஃப்ஐஆர் காப்பியில், ஏ-1 குற்றம்சாட்டப்பட்டவர் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஏ-2வாக இணைக்கப்பட்டிருப்பவர் அவரது சகோதரர் அன்பரசன். இவர் செந்தில் அண்ட் கோ ஷேர் ஹோல்டர், ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பார்ட்னராக உள்ளார். ஏ-3யாக கே.சி.பி. எஞ்சினியர்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கே.சி.பி. எஞ்சினியர்ஸ் பிரைவேட் லிமிட்டெட், ஆலயம் ஃபவுண்டேஷன்ஸ் லிமிட்டெட், காண்ஸ்ட்ரானிக்ஸ் இன்ஃப்ரா லிமிட்டெட், வைடூர்யா ஹோட்டல்ஸ்,ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.சந்திரபிரகாஷ் ஏ-4 ஆக இணைக்கப்பட்டுள்ளார். இதே நிறுவனங்களின் பங்குதாரர் மற்றும் இயக்குநர் ஆர்.சந்திரசேகர் ஏ-5 ஆக இணைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் உட்பட 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு தரப்புகளிலும் அளித்த புகாரில் பொது சேவகராக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் கோவையின் கட்டுமானம் மற்றும் வழங்கல் விநியோகத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தன்னைச் சார்ந்தவர்களுக்காக பெரிய அளவில் ஆதாயம் தேடியுள்ளார் என்றும் இந்தச் சார்ந்தவர்கள் பட்டியலில் அவரது சகோதரர் அன்பரசன் உட்பட அவர்களது நிறுவனங்களான P. செந்தில் ரூ கோ., முஊP இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்., இன்விக்டா மெடிடெக் லிமிடெட் (இப்போது கான்ஸ்ட்ரோனிக்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்ப்ரா லிமிடெட், ஆலயம் பவுண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்., கான்ஸ்ட்ரோமல் கூட்ஸ் பிரைவேட் லிமிடெட்., ஏசிஇ டெக் மெஷினரி கூறுகள் இந்தியா பிரைவேட் லிமிடெட், ரத்னா லட்சுமி ஹோட்டல்கள் (பி) லிமிடெட், வைதூர்யா ஹோட்டல்ஸ் (பி) லிமிடெட், ஏஆர் இஎஸ் பிஇ இன்ஃப்ரா (பி) லிமிடெட், ஸ்ரீ மகாகணபதி ஜூவல்லர்ஸ் (பி) லிமிடெட், ஆலம் கோல்ட் ரூ டயமண்ட் (பி) லிமிடெட், வர்தன் உள்கட்டமைப்பு., கான்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா., மெட்ராஸ் இன்ஃப்ரா., ஓசூர் பில்டர்ஸ்., டூ லீஃப் மீடியா., எஸ்.பி. பில்டர்ஸ்.,சி.ஆர். கண்ட்ஸ்ரக்ஷன்ஸ் மற்றும் இவற்றில் தொடர்புடைய ராபர்ட் ராஜா, சந்திரபிரகாஷ் ஆகியோரும் இதில் அடக்கம். மேலும் இந்த நிறுவனங்களுக்கு டெண்டர் விடுவதற்காக முன்பின் தெரியாத சில அரசு அதிகாரிகள் ஏ-1 எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்கால் கண்மூடித்தனமாக சட்டத்தை மீறியுள்ளனர். அதனால் முன்னாள் அமைச்சர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளது.


சென்னையில் உள்ள எம்.எல்ஏ விடுதியில் வைத்து முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் குற்றவாளியாக வழக்கு பதியப்பட்டு அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும் அவரது நண்பர்கள் வீடுகளிலும் விசாரணை செய்து வந்த நிலையில் அடுத்த சிக்கலில் மாட்டிக்கொள்ள போகும் மாஜி அதிமுக எம்எல்ஏ யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பதவியில் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பதட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் கட்டுக்கட்டான பணங்களும், குவித்து வைக்கப்பட்ட நகைகளும் அடங்கிய ஒரு புகைப்படமும் ரெய்டின் போது இதெல்லாம் சிக்கியதாக சொல்லியும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த புகைப்படம் பற்றி தான் தற்போது சமூகவலைதளத்துல பரபரப்பான பேச்சாக இருக்கின்றது.