திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ தடுப்பு மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்த தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையின் போது தீயணைப்பு வீரரின் சட்டையில் திடீரென தீப்பற்றியதால் சிறிது நேரத்திற்கு பரபரப்பு நிலவியது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சிவராசு முன்னிலையில் தீ தடுப்பு மற்றும் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் கருணாகரன் தலைமையில் 30 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பேரிடர் காலங்களில் வெள்ளம் மற்றும் இயற்கை இடர்பாடுகளுக்கு இடையே சிக்கி இருக்கும் நபர்களை எவ்வாறு மீட்பது, கட்டிடங்களில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பது எப்படி என்பன குறித்து நேரடி செய்முறை விளக்கத்தை செய்து காட்டினர்.
மேலும் வீட்டில் சமையல் அறையில் தீ பிடித்தால் எவ்வாறு அணைப்பது, சமையல் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது, உடலில் தீ பரவினால் எவ்வாறு அணைப்பது உள்ளிட்ட செயல் முறை விளக்கத்தை செய்து காட்டினார்.
அப்போது தீயணைப்பு வீரர் ஒருவர் சட்டையில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. உடனே சுதாரித்துக் கொண்ட தீயணைப்பு வீரர், இப்படிப்பட்ட சந்தர்பத்தில் எப்படி தீயை அணைக்க வேண்டும் என செய்து காண்பித்தார். இதில் அந்த தீயணைப்பு வீரர் எவ்வித காயங்களும் இன்றி தப்பியது, நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்தது. இருப்பினும் தீயணைப்பு வீரர் சட்டையிலேயே திடீரென தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.