• Sat. Apr 20th, 2024

தாலிபான் விவகாரம் – விமர்சனங்களை சந்திக்கும் அமெரிக்கா!…

By

Aug 16, 2021

தாலிபான் விவகாரம் – விமர்சனங்களை சந்திக்கும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வெளியேற்றிய விதம் விமர்சனங்களை சந்தித்துள்ளது.


தாலிபன்களை எதிர்கொள்ள பில்லியன் டாலர் கணக்கில் அமெரிக்கா பணத்தை வாரி இரைத்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையும் 2011ஆம் ஆண்டு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 10,000 பேரைத் தொட்டது. ஆனால் கடந்த ஆண்டு வெறும் இது 4,000 துருப்புகளாகவும், தற்போது 650 துருப்புகளாகவும் சுருங்கி இருக்கிறது. அவர்களும் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க அங்கு இருக்கிறார்கள். நேட்டோ படைகள் இருந்தாலும், அமெரிக்காதான் ஆதிக அளவில் ஆட்களை களமிறக்கி இருந்தது.

2010 – 2012 காலத்தில், ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துருப்புகளைக் கொண்டிருந்த காலத்தில், ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வரை செலவழித்தது அமெரிக்கா. அதிரடி தாக்குதல் திட்டங்களிலிருந்து ராணுவம் தன் கவனத்தை திசை திருப்பி, ஆப்கன் படைகளுக்கு பயிற்சி வழங்கத் தொடங்கிய பின் செலவுகள் கணிசமாக குறைந்தன. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கணக்குப் படி, 2001 – 2019 வரையான காலத்தில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்காக 778 பில்லியன் டாலரைச் செலவழித்திருக்கிறது. அது போக அமெரிக்காவின் உள் துறை அமைச்சகம் போன்ற மற்ற சில அமெரிக்க முகமைகள் எல்லாம் சேர்த்து சுமார் 44 பில்லியன் டாலரை ஆப்கானிஸ்தான் போருக்கு செலவழித்து இருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் 822 பில்லியன் டாலர். இதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் கடந்த 18 ஆண்டுகளில் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது.

முறையான திட்டமின்றி படைகளை வெளியேற்றியது தாலிபான்களுக்கு சாதகமாக முடிந்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை எளிதாக கைப்பற்றியதற்கு அமெரிக்க படைகள் வெளியேறிய விதமும் முக்கிய காரணம் ஆகியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தொடங்கி பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் வரை பைடனின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் அரசிடம் 2 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் உள்ளனர். தாலிபான்களிடம் 70 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். உலகில் இருக்கும் எந்த ராணுவத்தையும் போல ஆப்கானிஸ்தான் ராணுவமும் மிகவும் வலிமை வாய்ந்தது மட்டுமல்லாமல் முறையாக பயிற்சி பெற்றது.

தாலிபான்கள் மொத்த நாட்டையும் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கான் அரசின் தலைவர்கள், அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்தவர்கள், அமெரிக்காவுடன் சேர்ந்து பணியாற்றிய பொதுமக்கள், பிரபலங்கள், அமெரிக்க அதிகாரிகளை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா உள்ளது. மொத்தம் இப்படி 30 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களை வெளியேற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்க படைகள் உள்ளது.

கண் கெட்ட பின்பே சூரிய உதயம் என்பது போல காபுல் மொத்தமாக வீழ்ந்த பிறகு கடைசி நொடியில் பைடன் இந்த கூடுதல் படைகளை அனுப்பி உள்ளார். எந்த விதமான முறையான திட்டமிடலும் இல்லாமல் பிடன் செயல்பட்டதால் இப்போது கடைசி நொடியில் கூடுதல் படைகளை அனுப்பி, மக்களை வெளியேற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *