நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், திருப்பிச் செலுத்தும் அளவு குறைவாகவே உள்ளது. இதனால், தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை இருப்பதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழக அரசுக்கு ரூ. ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் வருவது போல், தமிழக அரசின் கடனை அடைக்கிறேன் என்ற பெயரில் பேனருடன் வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் அருகே மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த காந்தியவாதி இளைஞரான ரமேஷ் தியாகராஜன் என்பவர் ரூ.2.63 லட்சம் கடன் தொகைக்குரிய காசோலை அடங்கிய அட்டையை தயார் செய்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். கோட்டாட்சியர் மு.கோட்டை குமார், அந்த இளைஞர் வழங்கிய காசோலை அட்டையை வாங்க மறுத்துவிட்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்குமாறு அவர் தெரிவித்து விட்டார். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் சென்றார் இளைஞர் ரமேஷ் வழங்கிய காசோலை அட்டையை மாவட்ட ஆட்சியரும் ஏற்க மறுத்து விட்டார்.