

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘திருச்சிற்றம்பலம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்தப் புதிய படத்தில் தனுஷுடன் ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் நித்யா மேனன் மூவரும் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளனர். இயக்குநர் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே தனுஷ் நடிப்பில் ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய 3 படங்களை இயக்கியவர். இது தனுஷுடன் இவர் இணையும் 4-வது படமாகும்.

மேலும் இந்தப் படத்திற்கு 6 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு அனிருத் இசையமைக்கிறார். ‘3’, ‘மாரி’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘தங்க மகன்’ ஆகிய தனுஷ் நடித்தப் படங்களுக்கு இசையமைத்திருந்த அனிருத் சமீப வருடங்களில் தனுஷ் படங்களுக்கு இசையமைக்கவில்லை. இப்போதுதான் மீண்டும் இதில் இணைந்திருக்கிறார். இதனால் அனிருத்தின் ரசிகர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
நேற்றுதான் இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. இந்தச் சூழலில் படத்தின் பெயரை நேற்று மாலை படக் குழுவினர் வெளியிட்டார்கள். ‘திருச்சிற்றம்பலம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
‘திருச்சிற்றம்பலம்’ என்பது தமிழ் பக்தி நூல்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல். சிதம்பரத்தில் குடி கொண்டிருக்கும் சிவபெருமானைக் குறிக்கும் சொல். சைவ சமூகத்தினர் அனைவரும் நாள்தோறும் உச்சரிக்கும் சொல். இதனாலேயே இந்தப் படத்தின் மீது இப்பொழுதே கவன ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
‘திருச்சிற்றம்பலம்’ என்ற பெயரை வைத்துக் கொண்டு இந்தப் படத்தை முழுக்க, முழுக்க கமர்ஷியல் படமாக எடுத்துவிட்டால் என்ன செய்வது, சொல்வது என்கிற கவலையும் சிவன் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

