

அதிமுக, அமமுக தொண்டர்களுடனும் நிர்வாகிகளுடனும் அலைபேசியில் தொடர்ந்து உரையாடி வரும் சசிகலா விரைவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுள்ளார்.
சசிகலா முடிவெடுப்பதற்கு முன்பே, ‘வரும் 23 ஆம் தேதி ஜெ. நினைவிடத்துக்குச் செல்கிறார்’ என்று தொலைக்காட்சிகளிலும்,பல டிஜிட்டல் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும்அவசரச் செய்திகள் உலாவந்தன.

இதுகுறித்து விசாரித்தபோதுதான், சசிகலாவிடம் இப்போதைக்கு அப்படி ஒரு திட்டமில்லை என்பதும் இதுகுறித்து சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், அமமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பிய ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் நமக்குக் கிடைத்தது. அதில், ‘சசிகலா அவர்கள் 23ஆம் தேதி அம்மா நினைவிடத்துக்கு செல்வதாக வருவது தவறான தகவல். ஆனால் போகும்போது கண்டிப்பாக அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். கவலைப்படாதீர்கள்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கொரோனா ஊரடங்குத் தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்படும் வரை சசிகலா காத்திருக்கிறார். ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து அடுத்தடுத்து மாவட்ட ரீதியாக சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். ஜெயலலிதா நினைவிடத்துக்குச் செல்லும்போது தன்னோடு மிகப்பெரும் கூட்டம் வரவேண்டும் என்று நினைக்கிறார் சசிகலா. அதனால் அடுத்த கட்ட ஊரடங்குத் தளர்வுகளுக்குக் காத்திருக்கிறார்.
இதற்கிடையில் ஜெயா டிவி மூலம் சசிகலாவின் மிக நீண்ட பேட்டி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஒருவர் சசிகலாவை ஜெயா டிவிக்காக சந்தித்து அந்த பேட்டியை எடுத்திருக்கிறார். 50 நிமிடங்கள் என்று இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் வகையில் எடிட் செய்யப்பட்டு வருகிறது. அந்த பேட்டியில் அதிமுகவில் தனக்குள்ள உரிமை, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிய தருணம், ஓ.பிஎஸ். தர்மயுத்தம் நடத்தியது எதற்காக என ஜெ.வின் மரணத்துக்குப் பின்னான பல விஷயங்களைப் போட்டு உடைக்கப் போகிறார் சசிகலா என்கிறார்கள் அவரது வட்டாரத்தில்.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடுதான் ஓ.பன்னீர் தர்மயுத்தம் நடத்தினார். இதற்காகவே நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதை ஒட்டியே எடப்பாடி அணியும், ஓ.பன்னீர் அணியும் இணைந்தன. ஆனால் அந்த விசாரணை ஆணையம் அதிமுக ஆட்சி முழுவதும் இருந்தும் விசாரணை முடியவில்லை.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் மரணம் அடைந்தது வரை அவரது அருகே இருந்தவர் சசிகலாதான். இதன் அடிப்படையிலேயே அன்று சசிகலா மீதும் பல புகார்கள் சொல்லப்பட்டன. பொதுமக்களிடையேயும் இந்த விவகாரத்தில் சசிகலா மீது ஒரு சந்தேகமும் அதன் விளைவான கோபமும் அப்போது இருந்தது. அது தொடர்பான கருத்துகளும் சமூக தளங்களில் வெளிப்படையாக பேசப்பட்டன. இந்த நிலையில் தனது பேட்டியில் ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக சசிகலா உடைத்துப் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் தாண்டி நிலவுகிறது

