


திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே பல்வேறு நடவடிக்கைகள், அதிரடி திட்ட அறிவிப்புகள், அதிகாரிகள் நியமனங்கள் என பல விஷயங்களுக்கு அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் சொன்ன படி பெட்ரோல் விலை குறைப்பு, மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம், கொரோனா நிவாரணம் என அதிரடி திட்டங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
சமீபத்தில் கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவோம் என்பது போல் தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து அசத்தியுள்ளார்.

வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு திட்டங்கள், மானியங்கள், விவசாயிகளுக்கு உதவித்தொகை ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளது விவசாய பெருங்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக நமது மாநில மரமான பனை மரத்தை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பனை தொடர்பான பல்வேறு தொழில்களை ஊக்குவிக்கவும், தேவையில்லாமல் வெட்டும் நடைமுறையை நெறிமுறைப்படுத்தப்படும் ரூ.3 கோடியில் பனை மரத்தினை மேம்பாட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டம் குறித்து மனம் குளிர்ந்துள்ள திருமாவளவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பனைமரங்கள் செங்கல் சூளைகளுக்காகவும் கரி உற்பத்திக்காகவும் கேட்பாரின்றி அழிக்கப்பட்டு வரும் சூழலில் அவற்றைப் பாதுகாத்திட தமிழகஅரசு முன்வந்திருப்பது ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறது. சிறுத்தைகளின் கனவு நனவாகிறது. முதல்வருக்கும் வேளாண் அமைச்சருக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

