விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பாக இலவச வீட்டு மனை பட்டா இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர மனு கொடுக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம், கோட்டைப்பட்டி பஞ்சாயத்து முனிசிபல் ஆபீஸ் வளாகத்தில் வசித்து வரும் அருந்ததியர் சமுதாய மக்கள் அன்றாடம் கூலி வேலை செய்து நிரந்தர சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வடமலைக்குறிச்சி கிராமம் புன்செய் நிலத்தில் வீடற்ற ஆதிதிராவிட அருந்ததியர் மக்களுக்கு 2002ல் ஒரு நபருக்கு 3 சென்ட் வீதம் 26 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. அரசு பட்டா வழங்கி 20 வருடங்கள் ஆன பிறகும் அந்த இடத்தில் இதுவரை வீடு கட்டித் தரவில்லை. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்து தருமாறு சுமார் 40 பெண்கள், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் பி.எஸ்.என்.எல் குருசாமி, பட்டியல் அணி நகர தலைவர் பாலமுருகன், வர்த்தக பிரிவு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதவன் வடிவேல் ஆகியோர் தலைமையில் மனு கொடுத்தனர்.