வெற்றி எனும் படிக்கட்டுகளை அடைய போராட்டக்குணம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் பல தடைகளையும், ஏமாற்றங்களையும் கடந்தே தீர வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை. முட்டி, மோதி எதையாவது சாதித்துவிட்டு, அதனை நமக்காக தோள் கொடுத்த உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வீடு திரும்பும் போது வெடித்துக் கதறும் அளவுக்கு சோகச் செய்தி காத்திருப்பது கொடுமை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிய தடகள வீராங்கனையான தனலட்சுமிக்கு அப்படியொரு சோக செய்தி தான் இடியாய் இறங்கியுள்ளது.
திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி. 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23 ஆண்டுகளாக இருந்து வந்த பி.டி.உஷாவின் சாதனையையே பின்னுத் தள்ளியவர். விளையாட்டு துறையில் ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தி வந்த தந்தை, தனலட்சுமி 9ம் வகுப்பு படிக்கும் போது காலமானார். சாதாரண குடும்ப பின்னணியில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்போடு வளர்ந்த தனலட்சுமிக்கு, தோள் கொடுத்து தோழியாக வழிநடத்தி வந்த இரண்டாவது அக்காவும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நெஞ்சுவலியால் மரணமடைந்தார். அடுத்தடுத்த இழப்புகளால் சோகத்தில் மூழ்கிய தனலட்சுமியை தளராமல் தாங்கிப் பிடித்தவர், அவருடைய மூத்த அக்கா காயத்ரி.
அம்மா உஷா, கறவை மாடு வளர்த்தும், 100 நாள் வேலைக்கும் சென்று கிடைத்த பணத்தையெல்லாம் மகள் தனலட்சுமியின் கனவுக்காக செலவிட்டார். அம்மா மற்றும் அக்காவின் உறுதுணையும், ஊக்கமும் தனலட்சுமிக்கு வெற்றியை எட்டிப்பிடிக்கும் ஏணியாக மாறியது. பாட்டியாலாவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்தார். அதன் மூலமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.
போட்டிக்கான பயிற்சி மற்றும் டோக்கியோ புறப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தனலட்சுமி, தொடர்ந்து பாட்டியாலாவிலேயே தங்கினார். அங்கிருந்து டோக்கியோ புறப்பட்டுச் சென்ற தனலட்சுமி, 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்றார். நேற்றோடு ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தனலட்சுமி இன்று தாயகம் திரும்பினார். திருச்சி விமான நிலையம் வந்தடைந்த தனலட்சுமிக்கு ஊர் மக்கள் தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.
வெற்றி, தோல்வியை விட ஏழ்மையிலும் கனவை நோக்கி ஓடி, ஒலிம்பிக் வரை சென்று திரும்பிய தனலட்சுமியை உறவினர்களும், நண்பர்களும் உற்சாகமாக வரவேற்றனர். அத்துணை கூட்டத்தில் அக்கா காயத்ரி இல்லாததை கவனித்த தனலட்சுமிக்கு அப்போது தான் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனலட்சுமியின் மூத்த அக்காவான காயத்ரி கடந்த ஜூன் மாதம் 12ம் தேதியே மரணமடைந்துள்ளார். இந்த துக்க செய்தியை தனலட்சுமிக்கு சொன்னால் துவண்டுவிடுவாளோ?, போட்டியில் கவனம் சிதறிவிடுமோ? என அஞ்சிய அவருடைய தாய் உஷா, மகள் தாயகம் திரும்பியதும் தெரியப்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்தார்.
திருச்சி விமான நிலையம் வந்தடைந்த கடைசி மகள் தனலட்சுமியை வரவேற்ற கையொடு, மூத்த மகளின் மறைவு செய்தியையும் பகிர்ந்து கொண்டார். தான் வெற்றி பெற வேண்டுமென தன்னை விட அதிகம் நேசித்த தன்னுடைய அக்கா மரணமடைந்த செய்தியைக் கேட்ட தனலட்சுமி விமான நிலைய வாசலிலேயே மண்டியிட்டு அமர்ந்து, கதறி அழ ஆரம்பித்தார். அக்காவை எண்ணி கண்ணீர் விட்டு கதறிய தனலட்சுமியை தாயாரும், உறவினர்களும் ஆறுதல் கூறி தேற்ற முயன்றனர். இந்த வீடியோ தற்போது காண்போரை கண்ணீர் சிந்த வைத்து வருகிறது…