• Thu. Jan 23rd, 2025

எம்.எல்.ஏ.க்கள் பிரியாணியில் கை வைக்கப்போகும் ஸ்டாலின்!…

By

Aug 16, 2021

தமிழக பட்ஜெட் தொடங்கி இருக்கும் நிலையில் சிக்கன நடவடிக்கையாக முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாணி, பரிசுப்பொருட்கள் வழங்கும் நடைமுறைகளை கைவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதன் முறையாக தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. முதன் முறையாக வேளாண் துறைக்கென பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் நிதி நெருக்கடி நிலை மக்களுக்கு தெளிவானது.

இந்நிலையில் சிக்கன நடவடிக்கையாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாணி, பரிசுப்பொருட்கள் வழங்கும் நடைமுறைகளை கைவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அந்த கூட்டசட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசுபொருட்கள் வழங்குவது, வெளியிலிருந்து பிரியாணி வரவழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உட்பட 1000 பேருக்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கூறப்படுகிறது. இவ்வாறு செலவழிக்க அரசு பட்ஜெட்டில் எந்த அனுமதியும் கிடையாது. எனவே முதல் முறையாக சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உணவை சொந்த செலவில் உண்ண வேண்டும் அல்லது கேண்டினில் உண்ண வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த பரிசீலனை ஒருவாரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.