90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆனந்தக் கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான ஆர்.ஜே.வாகப் பணியாற்றி, பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நகைச்சுவையான பேச்சுக்கும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாணியும் ஆனந்த கண்ணனுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி கொடுத்தது. நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த ஆனந்த கண்ணன் சன் டிவியில் ஒளிபரப்பான ‘சிந்துபாத்’, ‘விக்ரமாதித்யன்’ உள்ளிட்ட தொடர்கள் மூலமாக நடிகரானார், சில தமிழ் படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆனந்த கண்ணன் நடித்த படங்கள் பெரிதாக பெயர் பெற்றுத்தரவில்லை. சில படங்கள் வெளியாகாமல் பெட்டிக்குள்ளேயே முடங்கியது. இதனால் சிங்கப்பூருக்கே மீண்டும் திரும்பிய ஆனந்த கண்ணன், கடந்த சில நாட்களுக்கு முன்பு பித்தநீர் குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த செய்தியைக் கேட்ட ரசிகர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வந்த ஆனந்த கண்ணனுக்கு இப்படியொரு அரிதான புற்றுநோய் பாதிப்பா? என கண்கலங்கி வருகின்றனர்.