
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கட்சாத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக பெருமாள் என்பவர் உள்ளார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கிராமத்தில் உள்ள 4 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு இருந்ததை அகற்றிவிட்டு, அங்கு அம்மா விளையாட்டு மைதானத்தை உருவாக்கினார். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு கிராம ஊராட்சி தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் என 15 குடும்பத்தினரை சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இது குறித்து வட்டாட்சியரிடம் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்பொழுது கட்சாத்தநல்லூர் கிராமத்தில் ஊர் முளைப்பாரி உற்சவம் நடைபெறும் நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் இடமிருந்து விழாவிற்கான வரி வசூல் செய்யாமல் விழா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊராட்சி தலைவர் உள்பட 15 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மதுசூதன் ரெட்டியை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர். இதனை அடுத்து கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவரையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.
