• Thu. Mar 28th, 2024

அரசின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!..

By

Aug 14, 2021

வங்கதேசத்திலிருந்து வந்து இந்திய குடியுரிமை பெற்றவரை அயல்நாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைத்த தமிழ்நாடு அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வங்கதேசத்தில் பிறந்து வளர்ந்த சுஷீல் சர்கார் என்பவர், அந்நாட்டின் சிறுபான்மை இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால், மத ரீதியான துன்புறுத்தல் இருக்கும் என்ற அச்சத்தில் 1996ம் ஆண்டில் 13 வயது சிறுவனாக குடும்பத்துடன் இந்தியா வந்து கொல்கத்தாவில் குடியேறி, 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இந்திய குடிமகனாக பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டுகளை பெற்ற அவர், வேலை வாய்ப்புக்காக சிங்கப்பூர் சென்றார்.

சிங்கப்பூரில் இருந்து கடந்த மார்ச் மாதம் இந்தியா திரும்பிய அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த, சென்னை விமான நிலைய குடியேற்ற துறை அதிகாரிகள், அதில் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிடாமல் போலி முகவரி மூலம் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக கூறி, கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் வந்த அவரது நடமாடுவதை தடுக்கும் வகையில், திருச்சியில் உள்ள அயல்நாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தனது கணவரை விடுவிக்க கோரி ரூமா சர்கார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆகியோர் ஆஜரானார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன், இந்து மதம் சிறுபான்மையாக உள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வந்தவர்களை குடியுரிமை சட்டம், பாஸ்போர்ட் சட்டம் ஆகியவை அனுமதிப்பதாகவும், அதன்படி சுஷீல் சர்க்கார் முறையாக பாஸ்போர்ட் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய குடியுரிமை பெற்ற சுஷீல் சர்காரை, அயல்நாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைத்தது தவறு என கூறி, தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்ததுடன், சுஷீல் சர்காரை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *