திருக்குறளில் மேலாண்மைக் கருத்துக்கள் குறித்த ‘யெஸ் பாஸ்’ இந்தி நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
திருச்சி ஐஐஎம் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்திய மேலாண்மைக் கழக இயக்குநர் பவன் குமார் சிங் நூலை வெளியிட்டு பேசும்போது..,
‘‘மேலாண்மையில் குறள்கள் பற்றிய 60 கட்டுரைகளே இவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்போது, 1,330 குறள்களையும் படித்து விட்டால் எவ்வளவு நன்மை அடையலாம் என்பது புரிகிறது’’ என்றார்.
இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு, இந்தி எழுத்தாளர் திலிப் டிங்க் பேசும்போது..,
‘‘நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் நமது அன்றாட வாழ்வுக்கு பயனுள்ள தகவல்களை கொண்டுள்ளன’’ என்றார்.
நூலாசிரியர் சோம வீரப்பன் பேசிய போது தெரிவித்ததாவது..,
“உலகின் மூத்த மேலாண்மை குருக்களில் ஒருவர் ஐயன் திருவள்ளுவர் என்பதை காட்டவே இந்திய மேலாண்மைக் கழகத்தில் இந்த விழா நடத்தப்படுகிறது. வலியறிதல், காலமறிதல், இடமறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் போன்ற அத்தியாயங்கள் தற்கால மேலாண்மை பாடத்திட்டத்தில் உள்ள அத்தியாய தலைப்புகளுக்கு இணையானவை” என்றார்.
இதைத் தொடர்ந்து பட்டயக் கணக்காளர் அனில் கிச்சா பேசும்போது..,
‘‘இந்தப் புத்தகம், நடைமுறை தீர்வுகளை வழங்கும் பணியிடத்துக்கான கையேடு’’ என்று பாராட்டினார்.
மொழிபெயர்ப்பாளர் ரோஹித் ஷர்மா பேசும்போது..,
‘‘இந்நூல் இந்தி பேசும் மக்களிடையே வள்ளுவத்தில் உள்ள மேலாண்மை கருத்துகளை கொண்டு செல்லும் முயற்சி’’ என்றார்.
விழாவில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோட்ட மேலாளர், திருச்சி நகரத்தார் சங்க உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த புத்தகத்தை டெல்லியைச் சேர்ந்த பிரபாத் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
‘யெஸ் பாஸ்’ இந்தி நூல் வெளியீட்டு விழா
