• Wed. May 8th, 2024

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..!

Byவிஷா

Nov 27, 2023

உத்தரகாண் சுரங்கம் தோண்டும் பணியின் போது சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களை மீட்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட், சில்க்யாராவில் சுரங்கம் தோண்டும் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவால், 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். தொழிலாளர்களை மீட்க மேலிருந்து 86 மீட்டர் தூரம் வரை துளையிட வேண்டிய நிலையில், இதுவரை 19 மீட்டர் தூரம் துளையிடப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 22 வயதான தொழிலாளி மஞ்சித், தனது தந்தையிடம் வாக்கி டாக்கி மூலம் பேசியதில், அனைத்து தொழிலாளர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கவும், தொடர்பு கொள்ளவும் 4 அங்குல அளவிலான குழாய் பயன்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, செங்குத்தான வடிவில் துளையிட முடிவு செய்யப்பட்டு, அதற்கான துளையிடும் பணி நடைபெற்று வந்த நிலையில், திடீரென மழை பெய்து வருவதால் செங்குத்தாக துளையிடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை மழை தொடர்ந்தால், சுரங்கத்திற்குள் ராணுவ வீரர்களைக் கொண்டு பக்கவாட்டில் துளையிடும் பணி மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் தொழிலாளர்களின் நிலை குறித்து கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *