தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஓராண்டுக்கு முன் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து பணியாற்றி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநில அளவிலான மாநாடு நடத்திய விஜய், மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். ஆனாலும், ஒன்றரை ஆண்டுகளாகியும் அவர் நேரடியாக களத்திற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தவெக தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து 2 நாட்களாக பல்வேறு ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கு ஒய் (Y )பிரிவு பாதுகாப்பு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த பிரிவில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு அதிகாரிகள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 காவலர்கள் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். தமிழகத்திற்ககுள் இந்த பாதுகாப்பு விஜய்க்கு வழங்கப்படும். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.






; ?>)
; ?>)
; ?>)
