
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறைபிரசவமாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
மதுரை மாநகரில், கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டிற்கு பொதுமக்களை பங்கேற்க செய்யும் வகையில், மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே நடைபெற்றது. பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஆர்.பி.உதயகுமார் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது..,

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் லட்சம் குடும்ப மக்களை பங்கேற்கும் செய்யும் வகையில், கழக அம்மா பேரவையின் சார்பில் மதுரை பட்டினத்தை, பசுமை பட்டினமாக்கும் வகையில் மரக்கன்று கொடுத்து அழைக்கப்பட்டு வருகிறது. இதே மதுரையில் தான் புரட்சித்தலைவர், புரட்சிதலைவி அம்மா ஆகியோர் பல்வேறு மாநாட்டினை நடத்தினார்கள்

இதே மதுரையில் தான் முதன் முதலாக எடப்பாடியார் முதலமைச்சராக பொறுப்பேற்று, முதல் அரசு விழாவாக தமிழ் சங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எடப்பாடியார் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து மதுரையில் ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற இளைஞர் பெருவிழாவில் எடப்பாடியார் பங்கேற்று, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். இதே மதுரையில் முதன் முதலாக புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவை 32 வருவாய் மாவட்டங்களிலும் நடத்தி, புரட்சித்தலைவி அம்மாவின் கனவை நனவாக்கி காட்டினார்.
மதுரையில் தான் முதன் முதலாக சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மதுரையில் 120 திருமணத்தை நடத்தி வைத்தார். எடப்பாடியார் உறுதிக்கு, கழக தொண்டர்கள் உயிர் கொடுத்து வருகிறார்கள். புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவை எடப்பாடியார் நடத்தி பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள், கட்டிடங்கள் என நூற்றாண்டு விழா நினைவாக உருவாகி கொடுத்தார். அதனைப் பார்த்து புலியை பார்த்து, பூனை சூடு போட்டு கொண்ட கதையாக கருணாநிதிக்கும் நூற்றாண்டு விழாவை கொண்டாட முயற்சித்தார்கள் விழா தொடங்கும் போது தடைபட்டது.
புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை எடப்பாடியார் நடத்தினர். விளம்பரம் இல்லை மக்களின் விலாசம் இருந்தது. ஆனால் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் விளம்பரம் தான் இருந்தது விலாசம் இல்லை. தன்னைத் தேர்ந்தெடுத்த எடப்பாடி தொகுதியை நேசித்தது போல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் நினைத்து திட்டங்களை கொடுத்தார் எடப்பாடியார். குறிப்பாக தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மதுரைக்கு 55 முறை வருகை தந்து திட்டங்களை எடப்பாடியார் தந்தார்.
தமிழகத்தில் கடுமையான விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு நடைபெற்று வருகிறது.இந்த குடும்ப ஆட்சிக்கு, சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி மலர, நடைபெறும் மாநாடு கால்கோள் மாநாடாக அமைகிறது.
உதயநிதியை அமைச்சர் புகழ்ந்தார்கள். தற்போது முதலமைச்சரே புகழ்கிறார். தற்போது விளையாட்டு துறையை எடுத்துக்கொண்டால் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்காத அவல நிலை நடைபெற்றது. அதேபோல் அவர் ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் துறையிலே கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 50,000 பேர் தேர்வு எழுதவில்லை. உதயநிதியை புகழ் பாடுவதை மக்கள் விரும்பவில்லை. உதயநிதி வந்த பின்பு விளையாட்டு துறையில் புத்துணர்ச்சி ஏற்பட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். எந்த புத்துணர்ச்சியும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் இருக்கும் விளையாட்டு மைதானங்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று கூறினார்கள் எதையும் செயல்படுத்தவில்லை. வெறும் வார்த்தை ஜாலம் மட்டும் தான் உள்ளது. ஸ்டாலின் இப்படி தன் மகனைப் புகழ்வது நாடு எங்கே செல்கிறது என்று தெரியவில்லை. இதற்கு மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்து விட்டது. இதை குறைக்க வேண்டும் என்று எடப்பாடியார் குரல் கொடுத்து வருகிறார். ஆனால் முதலமைச்சர் காதில் வாங்கிக் கொள்ள மறுக்கிறார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறை பிரசவமாகும். இந்த திட்டத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டியுள்ளனர். கருணாநிதி சொத்தை விற்று இந்த திட்டத்தை கொடுக்கவில்லை.
இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்று முழு பூசணிக்காயை ஸ்டாலின் மறைக்கிறார். இன்றைக்கு கடன் வாங்கும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று நாடாளுமன்றத்தில், நிதி அமைச்சர் கூறியுள்ளார் அந்த குற்றச்சாட்டிற்கு இதுவரை ஸ்டாலின் பதில் கூறவில்லை.
தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை என வேதனைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் வகையில், முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுகவின் இந்த எழுச்சி மாநாடு நடைபெறும்.
திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக எதுவும் போராடவில்லை, குரல் கொடுக்கவில்லை அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் கூட மக்களுக்கு நினைவு வரவில்லை. இன்றைக்கு திமுக ஆட்சிக்கு கண்டம் வந்துவிட்டது ஈடி சோதனை, வருமான வரி சோதனை என்று நடைபெற்று வருகிறது. அதிமுக இயக்கம் வலுவாக உள்ளது இந்த இயக்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்கள் சருகுகள் தான் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பா. சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் ஏ.கே பி. சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
