• Thu. May 2nd, 2024

சென்னையில் பாஜக பெண் நிர்வாகி கைது

Byவிஷா

Apr 9, 2024

சென்னை வில்லிவாக்கத்தில் போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி மீனாட்சியை சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (55). இவர் நேற்று திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; திருமங்கலம் எச்.பிளாக் 6வது மெயின் ரோடு பிரதான சாலையில் எனக்கு சொந்தமான 2 அடுக்குமாடி கொண்ட வீடு உள்ளது. இந்த வீட்டை கடந்த 2 வருடத்துக்கு முன்பு பாஜ பிரமுகர் மீனாட்சி (38) என்பவருக்கு வாடகைக்கு விட்டோம். அந்த வீட்டில் வசித்து வந்த மீனாட்சி எனது வீட்டின் கீழ் தளத்தில தேர்தல் பணிமனை திறந்து பாஜகவினர் வந்து செல்வதாக தகவல் கிடைத்தது.
இதனால் நான் அங்கு சென்று பார்த்தபோது தேர்தல் பணிமனை திறக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து மீனாட்சியிடம் சென்று கேட்டபோது ”உன்னால் என்ன செய்ய முடியமோ செய், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்போறியா, போலீஸ் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்’ என்று தெரிவித்தார்.
எனவே எனது வீட்டை காலி செய்ய வைக்கவேண்டும். அனுமதி இல்லாமல் எனது வீட்டில் தேர்தல் பணிமனை எப்படி திறக்கலாம். எனக்கு கொலை மிரட்டல் விடுவித்த பாஜ பிரமுகர் மீனாட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில், திருமங்கலம் போலீசார் விசாரணை செய்தனர். இதில், வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் அவரது கையெழுத்து இல்லாமல் போலி ஆவணம் தயாரித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து ஒரு மாதம் தேர்தல் பணிமனை நடத்துவதற்கு அனுமதி வாங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்கம் அருகே தேர்தல் பணிக்காக நின்றுக்கொண்டிருந்த மீனாட்சியை கைது செய்து திருமங்கலம் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மீனாட்சி கூறியதாவது; கடந்த 2 வருடத்திற்கு முன்பு வாடகை ஒப்பந்தம் போடப்பட்டு வசித்து வந்தேன். பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் பணிமனை திறப்பதற்கு இடம் தேடி வந்தோம். ஆனால் சரியான இடம் கிடைக்கவில்லை. இதனால் நான் வசிக்கும் வாடகை வீட்டில் தேர்தல் பணிமனை திறப்பதற்கு முடிவு செய்து வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பாஜ 104வது மண்டல தலைவர் மருதுபாண்டியின் யோசனைபடி வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் அவரது கையொப்பம்போல் போலியாக கையொப்பம் இட்டு தேர்தல் பணிமனை திறப்பதற்கு ஏற்பாடு செய்தேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலியான ஆவணம் தயார் செய்து வீட்டின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் பணிமனை திறந்துவைத்த மீனாட்சி மீது 294 ஆபாசமாக பேசுதல், 406 நம்பிக்கை மோசடி செய்வதறகான தண்டனை, 420 ஏமாற்றி மற்றும் நேர்மை இன்றி தூண்டி பொருளை பெறுதல் அல்லது கொடுக்கும்படி செய்தல், 506 கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். பின்னர மீனாட்சியை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதற்கு உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் மண்டல தலைவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *