• Fri. May 3rd, 2024

அரசு ஊழியர்கள் தேர்தல் விடுமுறை ரத்து உத்தரவு வாபஸ்

Byவிஷா

Apr 20, 2024

தேர்தலில் வாக்களிக்காத அரசு ஊழியர்களின் தேர்தல் விடுமுறை ரத்து என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.
தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையுடன் விடுவது நமது நாட்டின் தேர்தல் நடைமுறைச் சட்டம். அதன்படி, ஒவ்வொரு தேர்தலின்போதும், தேர்தல் நடைபெறும் பகுதிகளில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தும் வகையில், விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 19ந்தேதி (நேற்று) தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதில், அரசு ஊழியர்கள் வாக்களிக்காவிட்டால், அவர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார். அதாவது, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை பணியாளர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும் என்றும், இந்த துறையின் 2ம் நிலை அதிகாரிகள், தங்களின் கீழ் வரும் பணியாளர்கள் அனைவரும் வாக்குகளை தவறாமல் செலுத்திவிட்டார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால், வாக்கு செலுத்தாதவர்களின் தற்செயல் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பில் ஒரு நாளை கழிப்பதற்கு ஏதுவாக, அலுவலக நடைமுறை 1ம் பிரிவில் அதுசம்பந்தப்பட்ட விளக்கத்தை அவர்கள் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த அறிக்கை அரசு ஊழியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அமுதாவின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பொது விடுமுறையை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது, இதில் அமுதா தலையிட முடியாது என கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், அமுதாவின் உத்தரவு தேர்தல் நடத்தை விதிகளுக்கும், அரசியல் சாசனத்திற்கும் முற்றிலும் முரணானது. எந்த உயர் நிலை அதிகாரிகளும், தங்களுக்கு கீழ் வரும் பணியாளர்களை ஓட்டுபோட கட்டாயப்படுத்த முடியாது. யாருக்கும் வாக்கு செலுத்த விரும்ப வில்லை என்பதற்கும் 49ஓ (நோட்டா) மூலம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் உரிமை வழங்கியுள்ளது. எனவே உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
அமுதாவின் உத்தரவு அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது ஆட்சியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அமுதாவின் அறிக்கையில் அரசு ஊழியர்களின் வாக்கு சிதறும் நிலை உருவானது. இதையடுத்து, அரசு ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றத. இதைத்தொடர்ந்து, 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்படுவதாக, உள்துறை செயலாளர் அமுதா மீண்டும் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இந்நிலையில் நேற்று உள்துறை முதன்மை செயலாளர் அமுதா மீண்டும் ஒரு அலுவலக உத்தரவை பிறப்பித்தார். அதில், இதற்கு முன்பதாக பிறப்பிக்கப்பட்ட அலுவலக உத்தரவில் கூறப்பட்டுள்ள உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக திரும்ப பெறப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பவர் உள்துறை செயலாளர் அமுதா. இதை வைத்துக்கொண்டு அவர் விதிகளை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாக பல புகார்கள் கூறப்படும் நிலையில், தேர்தல் விடுமுறை ரத்து என்று அவர் அறிவித்தது, தலைமைச்செயலக ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மேலிடத்தின் உத்தரவின் பேரில் அவரது உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *