மத்திய பிரதேசத்தின் மாண்ட்லாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும், மாநில முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “மாநிலத்தில் பழங்குடியின மக்கள் பாராம்பரிய முறைப்படி இலுப்பை பூவில் இருந்து மதுபானம் தயாரிக்கிறார்கள்.
புதிய கலால் கொள்கையின்படி, இலுப்பை பூவில் இருந்து மதுபானம் தயாரிப்பது இனி சட்டவிரோதம் ஆகாது. இதுபோல் தயாரிக்கப்படுவதை பாரம்பரிய மதுபானம் என மதுக்கடைகளில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பும், வருமானமும் அதிகரிக்கும்” என்று கூறினார்.
முதல்வரின் அறிவிப்பிற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கூறியதாவது: “கள்ளச்சாராயம் குடித்து சமீபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
அப்படி இருக்கும் நிலையில், இலுப்பை பூவில் இருந்து தயாரிக்கப்படும் மதுவை சட்டப்பூர்வமாக்கும் அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இதை பாஜகவின் தார்மீக வீழ்ச்சியாகவே கருத வேண்டும்” என தெரிவித்துள்ளார்.