அதிமுக கவுன்சிலர் அவையில் தங்களுக்கு உரிய இடம் ஒதுக்காததை கண்டித்தும், சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
மதுரை மாநகராட்சியின் மண்டல கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கியது. இதில் மதுரை மாநகர மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், ஆணையாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களுக்கு உரிய இடம் ஒதுக்காமல் கடைசி இருக்கையில் இடம் ஒதுக்கியதை கண்டித்து மேயர் மற்றும் ஆணையாளர் முன்பு நின்று சத்தம் போட்டனர். தங்களுக்கு உரிய இடம் ஒதுக்க வேண்டும் இல்லை என்றால் கூட்டத்தொடர் முழுவதும் மேயர் இருக்கைக்கு முன்பாக நிற்போம் என கூறினார். இதனையடுத்து ஆணையாளர் விதிமுறைகளின்படி எங்கு இடம் ஒதுக்க வேண்டுமோ அங்கு ஒதுக்கப்படும் தங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து கூட்டம் தொடங்கியது. தங்களுக்கு உரிய இடம் ஒதுக்க வேண்டும் என கோரி அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். அதிமுக கவுன்சிலர் சோலைராஜா செய்தியாளரிடம் கூறியதாவது தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரியை கண்டித்தும் மதுரை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் உள்ளோம், 15 பேர் மட்டுமல்லாது மதுரை மாநகராட்சி உள்ள அனைத்து பொது மக்களுக்காகவும் கோரிக்கை விடுப்பதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். எனவே எங்களுக்கு உரிய இடம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.