மும்பையில் இன்று நடைபெறும் I.N.D.I.A. கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திலாவது பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்வீர்களா என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
“மும்பையில் இன்று (ஆகஸ்ட் 31) I.N.D.I.A. கூட்டணி கட்சித் தலைவர்களின் மூன்றாவது கூட்டம் நடைபெறுகிறது. அதனையொட்டி சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
- இந்தக் கூட்டத்திலாவது கூட்டணியின் தலைவர் அதாவது பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வீர்களா?
- ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரின் கோரிக்கை பற்றி கூட்டணியில் மற்ற கட்சிகளின் கருத்து என்ன?
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஆகியோர் கூறியதற்கு கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் பதில் என்ன?
- கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியுடன் டெல்லி, பஞ்சாப், குஜராத்தில் காங்கிரஸ் தேர்தல் கூட்டணி வைக்குமா? தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளுமா?
- கேரளத்தில் காங்கிரஸ{டன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைக்க முடியுமா?
- மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எப்படி தொகுதி உடன்பாடு செய்து கொள்ளப் போகிறது?
- உத்தரப்பிரதேசத்தில் 2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ{டன் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்த சமாஜ்வாதி கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ{க்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கப் போகிறது? கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒதுக்கும் ரேபரேலி, அமேதி தொகுதிகள் மட்டும்தானா?
- திமுக அமைச்சர்களின் பிரிவினைவாத பேச்சுகள் பற்றியும், அந்நிய ஆங்கிலத்திற்கு வெண் சாமரம் வீசிக் கொண்டு, இந்தி மொழிக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்து வரும் திமுக பற்றி மும்பை கூட்டத்தில் விவாதிக்கப்படுமா? இது குறித்து கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் கருத்து என்ன?
- மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் கட்சி. அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சராக இருந்தும், மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. இதுபற்றி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் கருத்து என்ன?
- மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான, திமுகவும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது நீட் தேர்வுக்கு எதிராக திமுக போராடி வருகிறது. நீட் தேர்வு இருக்காது என பொய்யான வாக்குறிதியை திமுக திரும்ப திரும்ப அளித்து வருவதால் தமிழ்நாடு மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தாங்கள் ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வை அமல்படுத்தியுள்ள கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நீட் தேர்வு குறித்து என்ன நினைக்கின்றன? திமுகவுடன் உடன்படுகிறதா? முரண்படுகிறதா? இன்னும் கேள்வி நிறைய இருக்கின்றன. திரும்ப திரும்ப கேட்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.