
பூமியை நெருங்கும் சுமார் 2 கிமீ அகலமுள்ள மிகப் பெரிய விண்கல் ஆபத்து எற்படுத்துமா என்பது குறித்து நாசா முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆஸ்டிராய்டுகள்,விண்கற்கள் ,அல்லது சிறுகோள்கள் என இவற்றை அழைக்கலாம். இந்த குறுங்கோள்கள் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்திற்கு இடையே சுற்றிவருகின்றன. அவ்வப்போது இவை பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி வருகின்றன.
மேலும் சில விண்கற்கள் விண்வெளியைச் சுற்றிக் கொண்டு இருக்கும். இப்படி விண்வெளியில் சுற்றி வரும் ஆஸ்டிராய்டுகள் பெரும்பாலான நேரங்களில் பூமிக்கு எந்தவொரு ஆபத்தையும் ஏற்படுத்தாது.
சில அரிய சமயங்களில் இந்த ஆஸ்டிராய்டுகள் பூமியின் சுற்றுவட்டார பாதைக்கு அருகே வரும். பூமியின் புவி ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்படும் ஆஸ்டிராய்டுகள் பூமியை அடையும் முன்பு, வெப்பத்தில் பஸ்பம் ஆகிவிடும். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் மோதிய ஆஸ்டிராய்டுகளால் தான் பிரமாண்டமான டைனோசார்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துபோயின.
இந்நிலையில், சுமார் 2 கிலோமீட்டர் அகலமுள்ள மிகப் பெரிய ஆஸ்டிராய்டு ஒன்று பூமிக்கு மிக அருகே வர உள்ளது. வரும் மே 27ஆம் தேதி இந்த ஆஸ்டிராய்டு பூமியில் இருந்து வெறும் 40,24,182 கிமீ தொலைவில் வர உள்ளது. பூமிக்கு அருகே வரும் போது அது மணிக்கு 47,232 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்ற போதிலும், இதை அபாயகரமானதாக நாசா வகைப்படுத்தியுள்ளது. இந்த ஆஸ்டிராய்டு அடுத்து வரும் செப். 2029ஆம் ஆண்டு பூமிக்கு அருகே வரும். அதன் பின்னர் 2055 மற்றும் 2062 ஆகிய ஆண்டுகளில் இந்த ஆஸ்டிராய்டு பூமிக்கு அருகே வரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
