• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு இன்று வெளியாகுமா?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை ஜனவரி 27 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணையித்துள்ளது. அந்த காலக்கெடுவுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மாநில தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியான திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கின்றன.இந்த நிலையில் ஒமிக்ரான் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 24) விசாரணைக்கு வருகின்றன.

முன்னாள் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் மருத்துவர் நக்கீரன், ‘தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்’ என்று தொடுத்த வழக்கு உட்பட இரு வழக்குகள் கடந்த 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது…
பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு மாநில தலைமை தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம், ஜனவரி 27 ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதே?என்று கேட்டனர்.

அதற்கு மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த டிசம்பர் மாதமே உள்ளாட்சித் தேர்தலை கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவதற்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கடைப்பிடிக்கப்படும்.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும்என்று கூறினார். அப்போது மனுதாரர் டாக்டர் நக்கீரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலத்தில் உள்ள கொரோனா நிலவரத்தின் அடிப்படையில் தேர்தல் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று 2021 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் தொழில் நுட்ப கோளாறுகளால் காணொலி முறையில் அன்று வாதாட இயலவில்லை. எனவே திங்கள் கிழமை நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும். அப்போது முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று பொறுப்பு தலைமை நீதிபதி அறிவித்தார்.

அதன்படி உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கக் கோரிய வழக்கு இன்று (24.01.2022) சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வின் முன் வருகிறது. தமிழ்நாட்டி நேற்றைய கொரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை எட்டியிருக்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முக்கிய தீர்ப்பை இன்று உயர் நீதிமன்றம் அளிக்கிறது.