• Fri. Dec 13th, 2024

தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடுமா?

ByA.Tamilselvan

Aug 2, 2022

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 கட்டங்களாக நடந்துள்ளன. இறுதியாக கடந்த 11ஆம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதில் தொழிற்சங்கத்தினரின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான நோட்டீஸை போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களிடம் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வழங்கினர். ஆகஸ்ட் 3 அல்லது அதற்கு பிறகு வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தனர்.இந்நிலையில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் நாளை காலை 11 மணி அளவில் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று 67 தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பியது.
இந்நிலையில் பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும் என்று ஏற்கனவே தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. எனவே, நாளை பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.