
தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் அறிவிக்கப்பட்டது. காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தெரிவித்திருந்தது. உதவிதொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டியது கட்டாயம் எனவும் உயர் கல்வித்துறை குறிப்பிட்டிருந்தது. அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும் மாணவியரில், அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தோரின் விபரங்களை அனுப்புமாறு, இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.
மேலும் புதிய கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும், உதவித் தொகை வழங்கும் பணி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு ரூ 1000 உதவித்தொகைக்கான விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் திருத்தங்கள் செய்தலை விரைந்து மேற்கொள்ள உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்து தற்போது கல்லூரிகளில் பயிலும் 2ஆம் ஆண்டு, 3ஆம் ஆண்டு, 4ஆம் ஆண்டு மாணவியருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.