இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிக பெரிய தாக்குதலாக உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு கருதப்படுகிறது.
உக்ரைன் தலைநகர் கிவ்வை நோக்கி ரஷியா ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக உக்ரைன் பாதுகாப்பு படை பதிலடி அளித்துவருகிறது.
இதற்கிடையே, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான ரஷியா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வி அடைய செய்தது. 15 உறுப்பினர்கள் அடங்கிய கவுன்சிலில், தீர்மானத்திற்கு ஆதரவாக 11 பேர் வாக்களித்த நிலையில், இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட மூன்று நாடுகள் நடுநிலை வகித்தன.
தனது நிலைபாடு குறித்து விளக்கம் அளித்துள்ள இந்தியா, “கருத்து வேறுபாடுகள் மற்றும் தகராறுகளைத் தீர்ப்பதற்கான ஒரே பதில் உரையாடல்தான். ராஜதந்திரத்தின் பாதை கைவிடப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.
ரஷியாவின் செயல்களை விமரிசித்த ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, “உக்ரைனில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகளால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. அனைத்து உறுப்பு நாடுகளும் சர்வதேச சட்டம் மற்றும் ஐநா சாசனத்தின் கொள்கைகளை மதிக்க வேண்டும், ஏனெனில் இவை ஒரு ஆக்கபூர்வமான வழியை வழங்குகின்றன.
மற்ற நாடுகளின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்க வேண்டும். வன்முறை மிக்க விரோதமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.
ஐநாவில் ரஷியாவை கண்டிக்கும் வகையிலான தீர்மானத்திற்கு இந்தியாவின் ஆதரவை பெற அமெரிக்கா கடும் அழுத்தம் அளித்தது. குறிப்பாக, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசினார். ரஷியாவின் செயல்களை ஒன்றிணைந்து கண்டிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.