மயிலாடுதுறை மாவட்ட திமுகவில் சில மாதங்களாகவே மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிராக அனைத்து திமுக நிர்வாகிகளும் ஒன்று திரண்டுவிட்டனர். அதன் உச்சகட்டமாக ஆகஸ்டு 16 ஆம் தேதி நடந்த மாவட்ட திமுக கூட்டத்தில் அடிதடி மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுதும் பேசுபொருளாகியிருக்கிறது மயிலாடுதுறை மாவட்ட திமுக.
“நான் எத்தனையோ பஞ்சாயத்துகளை தீர்த்து வச்சிருக்கேன் ஆனால் இது போல ஒரு மாவட்டத்தை பார்த்ததில்லை” என டெல்டா மண்டல பொறுப்பாளரான அமைச்சர் நேருவே வேதனையோடு சொல்லும் அளவுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளது.
கடந்த மே 15 ஆம் தேதி மாலை நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போதே மயிலாடுதுறை திமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் நிவேதா முருகனின் செயல்பாடுகள் சரியாக இல்லை. அவர் சாதி ரீதியாக செயல்படுகிறார், எதிர்க்கட்சிகளோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் என்று குற்றம் சாட்ட அப்போதே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிராகவே அனைத்து நிர்வாகிகளும் திரண்டு நிற்கின்றனர்.
இந்த பின்னணியில்தான் ஆகஸ்ட் 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் நடந்த அரங்கத்துக்குள் வேறு யாரும் வரக்கூடாது என அரங்கத்தின் கதவுகள் பூட்டப்பட்டன.
கூட்டம் தொடங்கியதும் மாநில ஐடி விங் துணைச் செயலாளரும், மயிலாடுதுறை மாவட்ட ஐடி விங் பொறுப்பாளருமான ஸ்ரீதர் ஆவேசத்தோடு பேசத் தொடங்கினார்.

மாவட்டச் செயலாளர் நிவேதா முருகனை பார்த்து அவர், “இரண்டு வாரம் முன்பு திருச்சியில் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் நேரு கூட்டிய கூட்டத்தில், நான் சரியாக செயல்படவில்லை என்று என்னைப் பற்றி அமைச்சரிடம் புகார் அளித்தீர்கள். ஏன் அவ்வாறு அளித்தீர்கள்? சரியாக செயல்படாதது நானா நீங்களா? ஆதாரங்களோடு சொல்லட்டுமா?” என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
அப்போதே சலசலப்பு தொடங்கியது.
அதன் பின் மாவட்ட பொருளாளர் மகா அலெக்சாண்டர் எழுந்து, “என்னிடம் 70 ,80 செக்குகளில் கையெழுத்து வாங்கினீர்கள். அதெல்லாம் என்ன செய்தீர்கள்? என்ன கணக்கு? என கூட்டத்தில் நீங்கள் விவரிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் உங்களிடம் மிச்சம் இருந்த மூன்று கோடி ரூபாயை என்ன செய்தீர்கள்?” என்று சரமாரியாக கேள்விகள் கேட்டார்.
இதையடுத்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிராக பெரும்பாலான ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் எழுந்து குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
“நமது தலைவரான முதலமைச்சரை மிக கேவலமான வார்த்தைகளால் விமர்சித்தவர் மீது நாங்கள் போலீசில் புகார் கொடுத்து அவரை கைது செய்ய வைத்தோம். அவர் ஜாமினில் வெளிவந்த நிலையில் அவருடைய வீட்டுக்குச் சென்று பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறீர்கள். இது என்ன நியாயம்?” என நிர்வாகிகளிடமிருந்து சரமாரியான கேள்விகள் வந்த நிலையில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகனால் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தான் நிவதா முருகனின் ஆதரவாளர்கள் நாற்காலியை எடுத்து எதிரணியின் நிர்வாகிகள் மீது வீச பிரச்சனை கைகலப்பாக ஆரம்பித்தது.
உள்ளே நாற்காலிகள் பறந்த நிலையில் வெளியே கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களோடு திரண்டு நின்ற சில சமூக விரோதிகள் கதவை இடித்து தள்ளி உள்ளே நுழைந்தனர். அவர்கள் மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிரான நிர்வாகிகளை குறிவைத்து தாக்கத் தொடங்கினார்கள்.
இதை எடுத்து உடனடியாக அங்கிருந்த போலீசார் மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு தகவல் அளித்தனர். அடுத்த சில நிமிடங்களில் எஸ்பி ஸ்ட்ரைக் போர்ஸ் எனப்படும் காவல் படை திமுக அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
அதனால் மோதல் இந்த அளவோடு நிறுத்தப்பட்டது.

ஒருவேளை போலீஸ் படை வருவதற்கு தாமதமாகி இருந்தால், நிவேதா முருகனுக்கு எதிராக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வரும் சீனியர் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மாநில ஐடிவிங் துணைச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோரை அந்த சமூகவிரோதிகள் கும்பல் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கும் என்று திகில் குறையாமல் விளக்குகிறார்கள் மயிலாடுதுறை திமுக நிர்வாகிகள்.
நேற்று மதியம் இவ்வளவு தூரம் நடந்து விட்ட நிலையில் உடனடியாக நிவேதா முருகனுக்கு எதிராக பெரும்பாலான மாவட்ட திமுக நிர்வாகிகள் பொறுப்பு அமைச்சர் மெய்யநாதனை சந்தித்தனர்.
“இதற்கு மேலும் என்ன நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஏற்கனவே நீங்கள் வந்த போது உங்களை மயிலாடுதுறை காவேரி இல்லத்திலேயே வைத்து மிரட்டினார்கள். இப்போது மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிராக செயல்படுகிற நிர்வாகிகளை கொலை முயற்சி செய்யும் அளவுக்கு துணிந்து விட்டனர்.
இனியும் நீங்கள் யாருக்கும் சார்பில்லாத ’மைய நாதனாக’ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் பொறுப்பு அமைச்சர் மெய்ய நாதனிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
நிவேதா முருகனால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்று ஏற்கன்வே மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் உளவுத்துறையிடம் தனிப்பட்ட முறையில் புகார் அளித்திருந்த நிலையில், ஆகஸ்டு 16 மாவட்ட திமுக கூட்டத்தில் அது மேலும் ஊர்ஜிதமாகியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலினை மாப்பிள்ளையாக பெற்ற மயிலாடுதுறை மாவட்டத்தில் நடக்கும் இத்தகையை மோதல்கள், முதல்வரின் காதுகளுக்கும் சென்றுவிட்டன. விரைவில் கடும் நடவடிக்கை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மாவட்ட திமுகவில் நிலவுகிறது.