தமிழ்நாடு முதலமைச்சர் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடங்கப்படும் இத்திட்டம் 1லட்சத்து 70 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக இன்று விழுப்புரம், மதுரை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. பின்னர் மீதமுள்ள 26 மாவட்டங்களில் இந்த திட்டம் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கற்றல் செயல்பாடுகள் நடைபெறும்.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இல்லம் தேடி கல்வித் திட்டம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி புகட்டும். நேரடி வகுப்புகள் தரும் பயனை ஆன்லைன் கல்வி தராது. மாநில சுயாட்சி மத நல்லிணக்கம் போன்ற பல செயல்களை செய்துவரும் நிலையில்தான் இல்லம் தேடி கல்வித் திட்டங்களையும் கொண்டு வருகிறோம்.
திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகள் பேசி வருகிறார்கள். இதுபோன்ற திட்டங்கள்தான் திராவிடம். ஒரு காலத்தில் இன்னார்தான் படிக்க வேண்டும் இன்னார் படிக்கக்கூடாது என்று இருந்த நிலையை மாற்றிய ஆட்சி, திராவிட ஆட்சி. ஏழை எளிய விளிம்புநிலை மக்கள் மற்றும் பட்டியலின பழங்குடியின மக்களுக்கு பலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது” என்றார்.