• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

வனவிலங்குகள் தாகம் தீர்க்க காமராஜ் சாகர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும்!

முதுமலை வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளதால், வனவிலங்குகளின் தாகம் தீர்க்க காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மலைமாவட்டமான நீலகிரியில் 65 சதவீத வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுயானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த ஆண்டில் ஊட்டி, மஞ்சூர், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாக இருந்ததால், பல இடங்களில் புற்கள் கருகி காய்ந்து விட்டன. மரங்களில் இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது.  

குறிப்பாக முதுமலை வனப்பகுதிகள் பசுமையை இழந்து வறட்சியான காலநிலை போல் காட்சி அளிக்கிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. பசுமை புற்கள் இல்லாததால் உணவு தேடி குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளது. ஆண்டுதோறும் வறட்சி காரணமாக வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், வனவிலங்குகளை பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வனவிலங்குகளின் தாகத்தை தீர்ப்பதற்காக காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது இதுவரை அணை திறக்கப்படவில்லை.

இதனால் சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. முதுமலை வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் ஊட்டி அருகே காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.