• Sat. Apr 27th, 2024

வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு

ByA.Tamilselvan

Sep 29, 2022

திண்டுக்கல் ,தேனி மாவட்ட பாசனத்திற்கு 58 கிராம கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு .
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தொடர்மழை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் உபரி நீரும் ஆற்றில் திறக்கப்பட்டது. இந்நிலையில், உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பும் வகையில் 58ம் கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து வைகை அணையில் இருந்து 58 ம் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆண்டிப்பட்டி மகாராஜன் ,பெரியகுளம் சரவணக்குமார், உசிலம்பட்டி ஐயப்பன், ஆகியோர் 58ம் கால்வாய் மதகுகளை திறந்து வைத்தனர். 58ம் கால்வாயில் வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கால்வாய் வழியாக சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பயணித்து உசிலம்பட்டி பகுதியில் 58 கிராமங்களில் உள்ள 33 கண்மாய்களை சென்றடையும். வைகை அணை நீர்மட்டம் 67அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் என்பதால், வைகை அணை நீர்மட்டத்தை 69 அடியாக நிலை நிறுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
திறக்கப்படும் தண்ணீரின் மூலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் 1912 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 373 ஏக்கரும் என மொத்தமாக 2,285 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் கால்நடை வளர்ப்புக்கும் இந்த தண்ணீர் பயன்படுத்தப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். 58ம் கால்வாய் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள், உசிலம்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கூறும்போது வைகை அணை 67 அடியை எட்டியதும் எந்த காரணமும் சொல்லாமல் 58 ஆம் கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *