நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம்மே 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.
ஏற்கனவே கேரளஸ்டோரி திரைப்படம் பற்றிய விவாதங்கள், எதிர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் ஃபர்ஹானா திரைப்படம் அந்த சுழலில் சிக்கி கொண்டது. இஸ்லாமிய அமைப்புகள் ஃபர்ஹானா திரைப்படத்தை திரையிட அனுமதிக்ககூடாது என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், அப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில்……
எங்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், கைதி, அருவி, தீரன் அதிகாரம் ஒன்று,ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது ஃபர்ஹானா திரைப்படம் இணைந்துள்ளது. தொடர்ந்து மக்களை மகிழ்விக்கக்கூடிய, சிந்திக்கத் தூண்டும் சிறப்பான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்கள் நிறுவனம் மிகுந்த சமுக பொறுப்புகளை கொண்டே என்றும் செயல்பட்டு வருகிறது. மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு, அரசால் முறையாக தணிக்கைச் செய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது.
ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும் , உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல திரைப்படங்களை வழங்கவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒரு நாளும் எந்த மத உணர்வுகளுக்கும் , நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல. மேலும் மனித குலத்திற்கு எதிரான ஓரு செயலை என்றும் எங்கள் கதைகளில் நாங்கள் அனுமதிப்பதில்லை, விரும்புவதுமில்லை. இதை எங்களின் ஃபர்ஹானா திரைப்படம் குறித்து அறியாமல் சர்ச்சைகளை உருவாக்கி வரும் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.
நம்முடைய தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு சொர்க்க பூமி. கலைப் படைப்புகளை மிகவும் மதிக்கும் மண். தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தை புரிதல் குழப்பத்தினால் அதன் வெளியீட்டுக்கு முன்பே எதிர்ப்பதும், சர்ச்சைகளுக்கு ஆளாக்குவதும் முறையானதல்ல. அது அவ்வாறு எதிர்பவர்களையே சரியான புரிதலற்றவர்களாகவே காட்டும். பல நூறு பேரின் கடுமையான உழைப்பில் தான் ஒரு திரைப்படம் வெளியாகிறது. நோக்கத்தில் பழுதில்லா ஒரு திரைப்படத்தை தமிழ் இரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.
இந்தியா போலவே, குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும், மத உணர்வுகள் புண்படுவது போன்ற காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால், அந்தப் படம் தணிக்கையைத் தாண்டுவது மிகக் கடினம். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஓமன், பக்ரைன், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளின் தணிக்கை விதிகள் கடுமையானதாக இருக்கும். ஆனால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாடுகளிலேயே ஃபர்ஹானா திரைப்படம், எந்தவித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளியீடுக்குத் தயாராகிவிட்டது. இதுவே ஃபர்ஹானா எந்த விதமான சர்ச்சையையும் உள்ளடக்காத படம் என்பதை தெளிவுபடுத்துகிறது.
எனவே ஃபர்ஹானா திரைப்படம் குறித்து புரிந்து கொள்ளாத நண்பர்கள் இந்த விளக்கத்தை நல்லமுறையில் ஏற்று, தோழமையுடன் ஒத்துழைப்பை வழங்கிடப் பணிவன்புடன் கோருகிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மே 12 அன்று தமிழ்நாடு முழுவதும் படம் வெளியான நிலையில் திருவாரூர் தைலம்மை திரையரங்கில் ஃபர்ஹானா திரையிடப்பட்டது. திரையரங்கு முன்பு இஸ்லாமிய போராட்டம் நடத்தியதால் திரையரங்கின் பாதுகாப்பு கருதி ஃபர்ஹானா படம் திரையிடப்படுவதை தியேட்டர் நிர்வாகம் நிறுத்திவிட்டது. தமிழ்நாடு முழுவதும் இது போன்று படம் நிறுத்தப்பட்டதாக செய்திகள் பரவியது. இதற்கு பதில்கூறும் வகையில் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் அப்போது இயக்குநர் ‘ஃபர்ஹானா’ படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்டேசன் கூறியதாவது.
“நான் இந்த படத்தின் கதையை பரிசுத்தமான மனதுடன் தான் அணுகினேன். இதில் இம்மியளவும் நம்முடன் வாழக்கூடிய இஸ்லாமிய சகோதரர்களை தவறாக காட்டிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஏனென்றால் நான் அப்படிப்பட்ட இயக்குநர் கிடையாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட திரையரங்கில் ஒரு காட்சி ரத்துசெய்யப்பட்டது. இதை சில ஊடகங்கள் தமிழ்நாடு முழுவதும் ‘ஃபர்ஹானா’ படக்காட்சிகள் ரத்து என செய்தி வெளியிட்டிருந்தனர்.
இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நல்ல படங்களைதான் இயக்குவேன் என வைராக்கியத்துடன் இருக்கிறேன். நல்ல படங்களை சமூக அக்கறையுடன் வெளியிடும் நிறுவனம் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அப்படியிருக்கும்போது தேவையற்ற சர்ச்சைகள், புரிதலில் இருக்கும் சிக்கல் காரணமாக வரும் திசை திரும்பும் முயற்சிகள் வருத்தமளிக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு வரும் படங்களில் ஆயுட்காலம் 2 முதல் 3 வாரங்கள் தான். ‘ஃபர்ஹானா’ மாதிரியான படங்கள் சராசரி பார்வையாளர்கள் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படுபவை.
இந்த படத்தின் மீது நெருடலும் சர்ச்சையும் ஏன் வருகிறது என்றால் நான் ஒரு குறிப்பிட்ட மதத்தை தொட்டு படத்தை இயக்கிவிட்டேன் என்பதால் தான். என் சகோதர, சகோதரிகளைப்பற்றி நான் படம் எடுக்காமல் யார் எடுப்பார்கள். இஸ்லாமிய சமூகத்தை பற்றிய நல்ல படங்கள் என்பது எனது ‘ஃபர்ஹானா’ படம் ஆரம்ப புள்ளியாக இருக்கட்டும். ஆனால் மற்ற படங்கள் வந்த நேரம் அதற்கான எதிர்மறை கருத்துகளும் என்னையும் அந்த புள்ளியில் வைத்து பார்க்கும் சூழலை உருவாக்கவிட்டது.
இஸ்லாமிய நண்பர்கள் தயவு செய்து படத்தைப்பாருங்கள். பார்த்துவிட்டு குறைகள் இருந்தால் நாங்கள் சரிசெய்ய தயாராக இருக்கிறோம். தமிழ் திரையுலகில் இனி இஸ்லாமிய சகோதரர்களை சரியாக சித்தரிக்கும் படங்கள் வர வேண்டும். அதற்கு ஆரம்பமாக ‘ஃபர்ஹானா’ இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை” என கூறினார்.