தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்த நிலையில், தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. எனினும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதாவது சென்னையின் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகள் நிரம்பி வருகின்றன.
அந்தந்த நீர்த்தேக்கங்களில் இருந்து பெரும் அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அந்த உபரி நீர் செல்லும் இடங்களின் கரையில் இருக்கும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று இரவு நிலவரப்படி பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே, மணலி மண்டலத்துக்கு உட்பட்ட மணலி புதுநகர் 1 மற்றும் 2 ஆகிய பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.