• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தரமான காற்று வேண்டுமா… ஏங்க… திண்டுக்கல்லுக்கு வாங்க!

ByS.Ariyanayagam

Sep 8, 2025

இந்தியாவில் தரமான காற்று வீசும் நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் நகரம் மட்டும் இடம்பெற்றுள்ளதால், மக்கள் மனநிறைவு பெற்றுள்ளனர்.

சிறுமலையின் மடியில் திண்டுக்கல் தவழ்வதால் இந்தப் பரிசு பொக்கிஷமாகியுள்ளது.

நாட்டில் காற்றின் தரம் மாசடையாமல் பேணப்படும் ஸ்மார்ட் சிட்டி நகரங்களின் அடிப்படையில் மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் பட்டியல் வெளியிட்டது. காற்றின் தரக்குறியீடு 50-க்கும் குறைவாக இருக்கும் நகரங்கள் தரமான காற்று வீசும் நகரங்களாக தேர்வாகின.

கர்நாடக மாநிலத்தில் தாவண்கெரே, பாகல்கோட், சாம்ராஜ் நகர், ஹாவேரி, கலபுர்கி, பெல்காம், மடிகேரி ஆகிய நகரங்கள் தரமான காற்று வீசும் நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தப்பூர் நகரம் மாசு குறைவான காற்று வீசும் நகரமாக உள்ளது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் நகரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

முதல் 10 நகரங்களின் பட்டியலில் கர்நாடக மாநிலம் தாவண்கெரே நகரம் 27 என்ற குறியீட்டைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. 10-வது இடத்தைப் பெற்றுள்ள பெல்காம், 48 என்ற தரக்குறியீட்டைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 46 தரக்குறியீடு பெற்று தமிழ்நாட்டின் திண்டுக்கல் நகரம் தரமான காற்று வீசும் நகரங்களின் பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.

திண்டுக்கல் நகரில் தரமான காற்று வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. திண்டுக்கல் சிறுமலை மலையடிவாரத்திலுள்ள நகரமாகும். கிழக்கே சிறுமலை, மேற்கே சில கி.மீ. தூரத்தில் கொடைக்கானல் மலை என இருபுறமும் மலைப்பகுதியில் இருந்து வீசும் காற்று மாசற்றதாகவே உள்ளது.

இந்நிலையில், அனைத்து வகையான மரக்கன்றுகளையும் நடவு செய்து `மியாவாகி’ குறுங்காடுகளை திண்டுக்கல் நகரில் உருவாக்கி அதைப் பராமரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் நகரில் திண்டிமாவனம் அமைப்பின் மூலம் நகரில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் நகரில் மட்டும் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. நகரைச் சுற்றி மொத்தம் ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு தற்போது நன்கு வளர்ந்துள்ளன.

தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டு காற்று மாசாவதைத் தடுக்கும் முயற்சியில் திண்டுக்கல் மக்களுடன் சேர்ந்து திண்டிமாவனம் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பேசியபோது,

“ திண்டுக்கல் நகருக்குள்ளோ, வெளியிலோ புகையை அதிகம் உமிழும் தொழிற்சாலைகள் இல்லை. இதனால் நகரில் காற்று மாசு அதிகரிக்க வாய்ப்பில்லை. குறியீடு 50-க்கும் கீழ் இருந்தால் தரமான, சுத்தமான காற்று எனலாம்.

திண்டுக்கல் நகரில் மத்திய அரசின் குறியீடாக 46 உள்ளது. தீபாவளி பண்டிகை மாதத்தில் காற்றின் மாசை அளவிட குடியிருப்புகள், போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் கருவிகளை வைத்து அளவிடுகிறோம். நகரில் தீபாவளிக்கு முன்னதாகவும், தீபாவளி முடிந்து 10 நாட்களுக்கு காற்றின் மாசு குறியீடு 60 வரை அதிகரிக்கிறது. மற்ற மாதங்களில் குறியீடு சுத்தமான அளவாக 50-க்குள் இருக்கிறது” என்கிறார்கள்.

தாய் மடியில் கன்றினைபோல், சிறுமலையின் மடியில் திண்டுக்கல் இருப்பதால் தூய்மையான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது. அதேநேரம் மற்ற நகர வாசிகள் திண்டுக்கல்லைப் பார்த்து பொறாமைப்பட்டு வருகின்றனர்.

”தரமான காற்று வேண்டுமா… ஏங்க… திண்டுக்கல்லுக்கு வாங்க!” என்று கூமாப்பட்டி தங்கப்பாண்டி பாணியில் திண்டுக்கல் வாசிகள் ரீல்ஸ் போடத் தொடங்கிவிட்டனர்.