திண்டுக்கல் – குமுளி அகல இரயில் பாதைத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றக்கோரி வரும் மார்ச் 23-ல் தேனி முதல் திண்டுக்கல் வரை பொதுமக்கள் நடைப்பயணம்
நடத்த உள்ளதை முன்னிட்டு,
கம்பம் (லோயர் கேம்ப்) – திண்டுக்கல் அகல இரயில் பாதை திட்டம் தேனி மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவு. தினமும் தேனி மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னைக்கும், பலநூறு பேருந்துகள் பிற மாவட்டங்களுக்கும் செல்கின்றன. அதில் மிகுந்த சிரமத்துடன், அதிக செலவில் மக்கள் பயணம் செய்கின்றனர். கம்பத்தில் இருந்து சென்னை செல்ல தனியார் பேருந்தில் 1000 முதல் 1500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இரயில் கட்டணம் ரூ.250/- க்குள் தான் இருக்கும். அதிலும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பாதி கட்டணத்தில் சென்னை செல்லலாம். மிகவும் பாதுகாப்பான, சிரமமில்லாத பயணமாக இருக்கும்.

மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து ஏலக்காய், மிளகு, ரெடிமேட் ஜவுளி, எண்ணை வித்துக்கள், இலவம் பஞ்சு, பருத்தி, வற்றல், மா, வாழை, திராட்சை, தேங்காய், வாசனை திரவியங்கள் மற்றும் பல விவசாய விளை பொருட்கள், தொழில் உற்பத்தி பொருட்கள், தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்கின்றன. அதிக கட்டணம் மற்றும் சரியான நேரத்தில் வாகனங்கள் கிடைக்காமல் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் பெரும் பாதிப்பு அடைகின்றனர். மேலும் பருப்பு வகைகள், உரங்கள், பஞ்சு, வற்றல் மற்றும் பல பொருட்கள் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் தினசரி தேனி மாவட்டத்திற்கு வருகின்றன. இரயில் போக்குவரத்து ஏற்பட்டால் இரயில்வே துறைக்கு சரக்கு போக்குவரத்து மூலமும் பெருமளவு வருவாய் கிடைக்கும். அத்துடன் குறைந்த செலவில் விவசரயிகள் மற்றும் வியாபாரிகள் தேனி மாவட்டத்தின் உற்பத்தி பொருட்கள், விளை பொருட்கள் இந்தியாவின் எந்த பகுதிக்கும் குறைந்த செலவில் கொண்டு சென்று விற்பனை செய்யலாம். இதன்மூலம் மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும். தொழில் வளர்ச்சி, வவசாய வளர்ச்சி மிகச்சிறந்த நிலையை அடையும். மக்கள் பெரும் பயனடைவார்கள்
அதுபோல கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்று வருகிறார்கள். அவர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதம். விழாக்காலங்களில் பேருந்துகளில் அலைமோதும் மக்கள் கூட்டம், கட்டண உயர்வு உள்ளிட்டவை தவிர்க்கப்படும். மேலும் சாலைகளில் நெரிசல்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கள் குறையும்.
2012-2013-ம் ஆண்டில் இத்திட்டத்திற்கான மறுமதிப்பீடு இரயில்வே துறையால் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய – மாநில அரசுகள், மக்களுக்கும், இரயில்வே துறைக்கும் பல நன்மைகளை தரும் இந்த கம்பம்-திண்டுக்கல் அகல இரயில்பாதை திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். என வலியுறுத்தி போராட்டக் குழு தலைவர் ஆர்.சங்கரநாராயணன் தலைமையில், பெரியார் வைகை பாசன விவசாய சங்க தலைவர் S. மனோகரன், தேனி மாவட்ட வணிக சங்க பேரமைப்பு தலைவர் செல்வக்குமார், அனைத்து வணிகர்கள் சங்கம், கம்பம் L. முருகன்,
தேனி மக்கள் மன்றம் தலைவர் M.K.M. முத்துராமலிங்கம், கம்பம் பள்ளத்தகாக்கு விவசாயிகள் சங்கம் முபாரக் அலி முன்னிலையில் வரும் மார்ச் 23-இல் தேனி முதல் திண்டுக்கல் வரை நடைப்பயணம் செல்ல உள்ளனர்.

இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் கம்பம் நில வணிகர் நல சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் எஸ்.மனோகரன் தலைமை தாங்கினார், நில வணிகர் நல சங்க தலைவர் பார்த்திபன், வர்த்தக சங்கம் எஸ்.என் முபாரக் முன்னிலை வகித்தனர். போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன் நடை பயண போராட்டம் குறித்தும், மனு கொடுப்பது குறித்தும் பேசினார். நிகழ்ச்சியில் நில வணிகர் நல சங்கத்தைச் சேர்ந்த கணேசன், நடேசன், கண்ணன், முருகன், ராஜலிங்கம், காமராஜ், ராஜா மணி, ஈஸ்வரன், கோட்டை குமார், சுதாகர், முத்துகிருஷ்ணன், துரைப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து போராட்ட குழு தலைவர் ஆர் சங்கர நாராயணன் கூறுகையில், நடைபயணம் வரும் மார்ச் 23 ஞாயிறு காலை 9.00 மணிக்கு தேனி
பங்களா மேடு பகுதியில் தொடங்கி திண்டுக்கல்லில் நிறைவடைகிறது. அங்கு
இரயில் நிலைய அதிகாரிகளிடமும், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளிக்க உள்ளோம். இந்த நடை பயணத்தில் எங்களுடன் வத்தலகுண்டு வர்த்தக சங்கம், உத்தமபாளையம் நகர் சங்கம், தேனி மாவட்ட இரயில் பயணிகள் சங்கம், தேனி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு துவினர், நட்டாத்தி நாடார் உறவின்முறை செயலாளர், மலநாடு கூட்டுறவு சங்க தலைவர் கலந்து கொள்கின்றனர்.