• Sat. Apr 27th, 2024

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 23-ம் தேதி பயணம் “- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ByA.Tamilselvan

May 9, 2023

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 23ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், மிட்சுபிஷி தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கையெழுத்தானது.
இந்த தொழிற்சாலை திருவள்ளூர் பெருவயல் கிராமத்தில் 52.4 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. மிட்சுபிஷி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தால் தமிழகத்துக்கு ரூ.1,800 கோடி முதலீடுகள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் ஏர் கண்டீஷனர் மற்றும் கம்ப்ரசர் தொழிற்சாலைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஜப்பான் நிறுவனத்தின் முதலீடு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. புதிதாக அமையவுள்ள தொழிற்சாலையில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் 60% முன்னுரிமை அளிக்கப்படும். ஜப்பான் – தமிழ்நாடு உறவை மேலும் வலுப்படுத்த பயணம் மேற்கொள்கிறேன். எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. நாட்டின் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை மாற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 23ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளேன். 2024 ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காக வெளிநாடு பயணம் செல்லவுள்ளேன். சுற்றுப்பயணத்தின்போது, தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளேன். கடந்த ஆண்டில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில், தொழில்துறை நிகழ்ச்சிகள்தான் அதிகம். பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களை வரவேற்கிறோம். உலகளவிலான முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *