• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வேதாந்தாவுக்கு எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி கூடாது! டிடிவி தினகரன்

ByA.Tamilselvan

Apr 23, 2022

விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க வேதாந்தா குழுமம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்க கூடாது. என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
வேதாந்தா குழுமத்தின் அங்கம் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையாகும். இந்த குழுமம் சார்பில் உலோகங்கள் உற்பத்தி மற்றும் சுரங்க தொழில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வேதாந்தா குழுமத்தின் மற்றொரு அங்கமாக கெய்ர்ன் ஆயில் அண்டு கேஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சில எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் 102 எண்ணெய் கிணறுகள் அமைத்து ஆய்வுப்பணி மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும் நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலை ஒட்டிய கடலோர பகுதிகளில் 137 கிணறுகள் அமைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அதோடு, கடலோர பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னதாக இதே பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளுக்கு பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி தமிழக அரசிற்கு கடந்தாண்டு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.வேதாந்தா அதே பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி கோரியுள்ளது
இதற்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க வேதாந்தா குழுமம் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக செய்திகள் வருகின்றன. அது உண்மையெனில் அத்தகைய அனுமதி எதையும் தமிழக அரசு வழங்கிடக்கூடாது. மேலும் இதுதொடர்பான விவரங்களை மக்களுக்கு தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.