நீலகிரி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற வண்டி பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி டியானி அருண் குமார் மாநில அளவில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கலைத்திருவிழா என்ற பெயரில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் முதலிடம் பெறுபவர் மட்டும் மாநில அளவிலான போட்டியில் அந்தந்த மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பாக பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுவார்ள். கூடலூர் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் டியானி அருண் குமார் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் வரைந்து வண்ணம் தீட்டுதல் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான இறுதிப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார்.
ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி டியானி அருண்குமார் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியிலும் வெற்றி பெற்று மாநில செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றதோடு மட்டுமல்லாமல் மாவட்ட அளவில் நடைபெறும் பல்வேறு சதுரங்க போட்டிகளிலும் வெற்றிகளை குவித்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகிறார் என்று பள்ளி மேலாண்மை குழு தலைவர் தெரிவித்தார். மேலும் மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்று நீலகிரி மாவட்டத்திற்கே பெருமை சேர்க்க வேண்டும் என்று பள்ளி மேலாண்மை குழு சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியில் நடைபெற்ற விழாவில் வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணி பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி ஆசிரியர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் கௌசல்யா, மும்தாஜ், பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர் சல்மா , உறுப்பினர்கள் அனஸ், யாசர், பாபு, யாக்கியா, சமீரா, இளைஞர் அணி பொறுப்பாளர் செல்லதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்…