• Thu. May 2nd, 2024

உசிலம்பட்டி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

ByP.Thangapandi

Apr 19, 2024

உசிலம்பட்டி அருகே இரயில் பாதையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த கிராமத்தின் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுவதுடன், 10% ஒட்டு மட்டுமே பதிவாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கிலியங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மதுரை-போடி அகல பாதையில் தரைப்பாலம் அமைத்து கொடுக்க கோரி கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த சூழலில், இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை இக்கிராம மக்கள் புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தரைப்பாலம் மற்றும் பாதை இல்லாததால் பள்ளி செல்லும் மாணவ,மாணவிகளும் 108 ஆம்புலென்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் சுமார் 3 முதல் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை உள்ளதாகவும், இந்த நிலையை சரி செய்து பாதை மற்றும் தரைப்பாலம் அமைத்துக் கொடுக்கும் வரை இந்த தேர்தல் மட்டுமல்லாது,வரும் அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்பு செய்வோம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த போராட்டத்தால் வாலாந்தூரில் உள்ள இந்த கிராம மக்களுக்கான வாக்குச்சாவடி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. சுமார் 504 வாக்குகள் உள்ள இந்த கிராமத்தில் வெளியூரில் வசிக்கும் மக்கள், அரசியல் கட்சியினர் என வெறும் 51 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

தகவலறிந்து வந்த அதிகாரிகளும், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சூழலில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *