• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டை உறுதி செய்ய வலியுறுத்தல்

Byகாயத்ரி

Dec 8, 2021

பொங்கல்பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகவும், நம் மக்களின் வீரத்தை பறைசாற்றும் வகையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.


இளைஞர் சமுதாயத்தின் போராட்டத்தால் மீட்டெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிக்கு மீண்டும் ஒரு சிக்கல் மகாராஷ்டிரா அரசு மூலம் வந்துள்ளது.

மகாராஷ்டிராவிலும் ரேக்ளா விளையாட்டுக்கான போராட்டம் நடந்து வருகிறது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், மகாராஷ்டிராவில் ரேக்ளா விளையாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மாநில அரசு தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘இந்த விவகாரம் தொடர்பான மனுவின் நகலை தமிழகம், கர்நாடகா அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்குங்கள். அவர்கள் அதனை பரிசீலனை செய்து பதிலளிக்கட்டும்’ என்று கடந்த 29ம் தேதி உத்தரவிட்டிருந்தது.


இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கது என்றாலும், இந்த வழக்கில் தமிழக அரசு தனிகவனம் செலுத்துவதோடு, சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து, தொடர்ந்து இந்த வழக்கை உன்னித்து கவனிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுமா என தமிழக மக்களிடையே எழுந்துள்ள சந்தேகத்தை தமிழக அரசு போக்க வேண்டும்.

அதோடு, அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை விரைந்து வெளியிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற மக்களின் அச்சத்திற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.