• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உ.பி. தேர்தல் அறிக்கை வெளியீட்டை பாஜக தள்ளிவைத்தது

பிரபல பின்னணிப் பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி, இன்று நடப்பதாக இருந்த உத்தரப் பிரதேச தேர்தல் அறிக்கை வெளியீட்டை பாஜக தள்ளிவைத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார்.

அவருக்கு வயது 92. 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று நடப்பதாக இருந்த உத்தரப் பிரதேச தேர்தல் அறிக்கை வெளியீட்டை பாஜக தள்ளிவைத்துள்ளது.

முன்னதாக லக்னோவில் இன்று மத்திய அமைச்சரும் உ.பி. தேர்தல் பொறுப்பாளருமான அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேஷவ் மவுரியா ஆகியோரின் தலைமையில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாக இருந்தது.

ஆனால், லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு அவரது மறைவுக்கு அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

உ.பி.யில் முதல் கட்டமாக 58 தொகுதிகளில் வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. களத்தில் 615 வேட்பாளர்கள் உள்ளனர். முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் அறிக்கை வெளியீட்டை பாஜக தள்ளிவைத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.