

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 1100ஐ நெருங்கியுள்ளது.
பாகிஸ்தானில் பருவமழையானது தீவிரமாக பெய்த காரணத்தினால் அங்கு வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. சிந்த், பலுசிஸ்தான் , கைபர் பக்துங்கா உள்ளிட்ட மாகாணங்களில் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின் அடிப்படையில் இதுவரை சுமார் 1070க்கும் மேற்பட்டோர் மழை, வெள்ளத்துக்கு பலியாகியுள்ளனர். 7 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 9.49 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
