தண்ணீர் குழாய் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள ஜகத்பூரில் மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் மைத்துனர் ரகுநந்தன் யாதவ் வசித்து வருகிறார். இவருக்கு ஜெய் ஜித் யாதவ் மற்றும் விஸ்வஜித் யாதவ் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவருக்கும் தண்ணீர் குழாய் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. சிறிதாக ஏற்பட்ட தகராறு பூகம்பமாக வெடித்தது.
இதை அடுத்து ஜெய்ஜித் மற்றும் விஸ்வஜித், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் விஸ்வஜித், ஜெய்ஜித் மற்றும் அவர்களின் தாய் ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விஸ்வஜித் உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், ஜெய்ஜித் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு சோதனை செய்ததுடன், விசாரணையும் நடத்தினர். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.