• Tue. Dec 10th, 2024

போலந்து நாட்டை தாக்கிய உக்ரைன் ராக்கெட்

உக்ரைனுக்கு எதிராக, ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான இந்த போரில் இரு நாடுகளின் வீரர்களும் பெருமளவில் உயிரிழந்தனர். போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இரு நாடுகளையும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தூதரக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி வருகின்றன. ஆனால், போரானது பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த போரில், உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், கெர்சன், மரியுபோல் மற்றும் லிவிவ் உள்ளிட்ட பல நகரங்கள் ரஷிய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்தன. கட்டிடங்கள் உருக்குலைந்து போயின. எனினும், பல நகரங்களை ரஷியாவின் பிடியில் இருந்து சாமர்த்தியமுடன் செயல்பட்டு உக்ரைன் மீட்டது. இதன்படி சமீபத்தில், ரஷிய படையிடம் இருந்து கெர்சன் நகரை உக்ரைன் மீட்டது. தொடர்ந்து கடுமையாக சண்டை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறும்
அறிவிப்பை ரஷியா வெளியிட்டு அதன் படைகள் வெளியேறின.
இந்த நிலையில், நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டின் மீது ரஷிய ஏவுகணைகள் மழையாக பொழிந்துள்ளன. போலந்தின் 12-க்கும் மேற்பட்ட பெரிய நகரங்களில் குண்டுவெடிப்புகள் நடந்த சப்தங்கள் எழுந்துள்ளன என தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் போலந்து நாட்டில் குடிமக்களில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரி தெரிவித்து உள்ளார். ஆனால், போலந்து தரப்பில் உடனடியாக பதில் அளிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து, போலந்து அதிபர் ஆண்டிரெஜ் துடா மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் இருவரும் அவசர பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் என போலந்து அதிபர் வட்டாரங்கள்
தெரிவித்தன. இதேபோன்று அதிபர் பைடன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், போலந்து அதிபர் துடாவிடம் பேசியுள்ளேன். போலந்தின் கிழக்கே மக்கள் உயிரிழந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொண்டேன். இந்த குண்டுவெடிப்பு பற்றிய விசாரணைக்கு போலந்துக்கு முழு ஆதரவை வழங்குவோம். அடுத்து எடுக்க வேண்டிய முறையான நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்ய தொடர்ந்து நாங்கள் போலந்துடன் தொடர்பில் இருப்போம் என அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், போலந்து நாட்டை தாக்கியது, ரஷிய ராக்கெட்டை நடுவழியில் மறித்து, வீழ்த்துவதற்காக அனுப்பப்பட்ட உக்ரைன் படையின் ராக்கெட் என முதல் கட்ட ஆய்வின்படி தெரிய வந்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் இன்று தெரிவித்து உள்ளனர். இதேபோன்று, அமெரிக்க அதிபர் பைடன், ஜி7 நாட்டு தலைவர்களிடம் கூறும்போது, உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட, ரஷிய ராக்கெட்டை தாக்கி அழிக்கும் ராக்கெட் என்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என கூறினார். இதனை டி.பி.ஏ. செய்தி நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது. போலந்தின் லுபெல்ஸ்கை மாகாணத்தில் ரூபீஸ்ஜவ் மாவட்டத்தில் பிரிஜிவோடோ கிராமத்தில் ரஷியாவில் தயாரான ராக்கெட் ஒன்று நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், போலந்து குடியரசின் மக்கள் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்தது. எனினும், ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் இதனை மறுத்ததுடன், உக்ரைன் மற்றும் போலந்து நாட்டு எல்லை பகுதியில் எங்களது ராணுவம் சார்பில் எந்த தாக்குதல்களும் நடத்தப்படவில்லை என தெரிவித்து இருந்தது.