திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 380 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் மனைவி ஜோதியம்மாள் (வயது 51) என்பவர் சமையலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு உதவியாக லிங்கவாடி பகுதியைச் சேர்ந்த ராசு மனைவி சரசு (வயது 57) என்பவர் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்று பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் திடீரென கசிவு ஏற்பட்டு வெடித்தது. இதில் ஜோதியம்மாள் மற்றும் சரசு இருவரும் காயமடைந்தனர். காயம் அடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலிண்டர் வெடித்த விபத்தில் சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் நத்தம் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பாக நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.